பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

242

மின் பகுப்பு

மின்சாரத்தை வேறிடங்களுக்குக் கொண்டு செல்ல மின்கடத்திப் பொருளாக செப்பு போன்ற உலோகக் கம்பிகள் பயன்படுத்தப் படுகின்றன. ஏனெனில், உலோகங்களும் உப்புக் கரைசல் போன்ற திரவங்களும் சிறந்த மின்கடத்திப் பொருட்களாகும். எனவே இவைகளை எளிதில் கடத்திகளாகவும் கண்ணாடி, பிளாஸ்டிக் போன்றவை அரிதில் கடத்திகளாகவும் கருதப்படுகின்றன.

'ஜெனரேட்டர்’ எனப்படும் மின்னாக்கிகள் மூலம், மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இம்மின்னாக்கிகளை விசையுடன் சுழலச் செய்ய நீரும் அனலும் பயன்படுத்தப்படுகின்றன. விசையுடன் பாய்ந்து வரும் நீரைக் கொண்டு மின்னாக்கிகளை இயக்கி மின் உற்பத்தி செய்வதால் இஃது நீர்மின் உற்பத்தி என அழைக்கப்படுகிறது. நிலக்கரி போன்றவற்றை எரிப்பதால் கிடைக்கும் அனலைக்கொண்டு மின்னாக்கி எந்திரங்களை வேகமாகச் சுழலச் செய்து மின் உற்பத்தி செய்யப்படுவதால் இஃது அனல்மின் உற்பத்தி என்று கூறப்படுகிறது.

மின்னாக்கி

மின்காந்தவியல் தத்துவ அடிப்படையில் இம்மின்னாக்கிகளில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரு கம்பிச் சுருள் வழியே காந்தத்தை விரைவாகச் செலுத்தினால் அக்கம்பிச் சுருள் மின்னோட்டம் பெறும். இத் தத்துவத்தின் அடிப்படையிலேயே மின்னாக்கி எந்திரங்கள் அமைந்துள்ளன. மின்கலங்களில் இரு வேறு உலோகத் தண்டுகளுக்கு இடையேயுள்ள மின் வேதியியல் அழுத்த வேறுபாடு எலெக்ட்ரான் நகர்வை ஏற்படுத்தி, மின்சாரம் கிடைக்க வழியேற்படுகிறது. தற்காலத்தில் சூரியக்கலன்கள் சூரிய ஒளியிலிருந்து நேரிடையாகலே மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன

தற்போது நீர், அனல் மின்சாரம் போன்றே அணு உலைகளின் உதவி கொண்டு அணுமின் உற்பத்தி செய்யப்படுகிறது.

மின்சாரத்தை தேவையானபோது செய்வதற்கும் தேவையற்ற போது மின்னோட்டத்தைத் தடை செய்வதற்கும் 'சுவிட்ச்' எனும் மின்தடைகள் பயன்படுத்தப்படுகின்றன. மின்சுற்றுப்பாதையில் காப்புருகிக் கம்பிகள் உள்ளன. மின்சாரம் அத்து மீறி பாய்ந்தால் இக்கம்பி வெப்பமிகுதியால் உருகி மின்னோட்டச் சுற்றைத் தடை செய்து விடும். இதனால் மின்சுற்றால் உருவாகும் தீவிபத்து போன்றவை தடுக்கப்படுகின்றன. மின்னோட்டவிசை வோல்ட் என்ற அளவாலும் மின்னோட்ட வலிமை 'ஆம்பியர்’ என்ற அளவாலும் கணக்கிடப்படுகிறது. மின் விளக்குகளில் பாயும் மின்திறன் 'வாட்’ என்ற அளவால் குறிக்கப்படுகிறது.


மின் பகுப்பு : மின்சாரத்தைத் திடப்பொருள் வழியே கடத்தும்போது அப்பொருள் வெப்பமடைகிறது. வேறு வேதி நிகழ்வுகள் எதுவும் ஏற்படுவதில்லை. எனினும், ஒரு பொருளின் கரைசல் வழியே மின்சாரத்தைப் பாய்ச்சினால் அக்கரைசலில் வேதியியல் மாற்றங்கள் நிகழ்கின்றன. சான்றாக, நீர்த்த கந்தக அமிலத்தை நீரில் விட்டு, அதில் மின்சாரத்தைப் பாய்ச்சினால் அத்திரவத்திலிருந்து ஆக்சிஜன், ஹைட்ரஜன் வாயுக்கள் வெளியேறிவிடும். இவ்வாறு மின்சாரம் வேதியியல் பகுப்புச் செய்வதால் இவ்வினை மின்பகுப்பு எனக் குறிக்கப்படுகிறது.

மின் பகுப்புக் கரைசல் திரவத்தில் ஒன்றையொன்று தொடாதவாறு இரு உலோகக் கம்பிகளை வைக்க வேண்டும். எந்தக் கம்பி வழியே மின்சாரத்தைப் பாய்ச்சுகிறோமோ அது நேர் மின் முனை எனப்படும். மின்சாரம் வெளியேறும் முனை எதிர்மின் முனை எனப்படும்.

ஒரு கரைசல் திரவம் மின் பகுப்புச் செய்யுமா செய்யாதா என்பது அதில் கரைக்கப்படும் பொருளைப் பொறுத்ததாகும். நீருடன் சோடியம் குளோரைடைக் கலந்தால் அக்கரைசலில் மின்சாரம் பாயும். ஆனால் நீருடன் சர்க்கரையையோ பென்சினையோ கலந்தால் அக்கரைசலில் மின்சாரம் பாய்வதில்லை.