பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வானொலி

279

கிறது. காற்றின் வேகம் "காற்று வேகமானி’ என்ற கருவியால் அளக்கப்படுகிறது. காற்றில் எந்த அளவுக்கு ஈரப்பதன் உள்ளது என்பதை அளந்தறிய "ஈரப்பதன் மானி’ என்ற கருவி பயன்படுகிறது. மழையின்போது எந்த

மழைமானி

அளவு மழை பெய்துள்ளது என்பதை ‘மழை மானி’ எனும் கருவியால் அளக்கப்படுகிறது, அதே போன்று பனிப்பிரதேசங்களில் உறை பனியின் அளவைக் கண்டறிய உறைபனி மானி’ எனும் கருவி பயன்படுத்தப்படுகிறது.

மேற்கண்ட கருவிகளைக் கொண்ட வானிலை ஆராய்ச்சி மையங்கள் முக்கிய நகரங்களிலும் உயர்ந்த மலை உச்சிகளிலும் நடுக்கடலிலும் நிறுத்தப்பட்டுள்ளகப்பல்களிலும் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு சேகரிக்கப்படும் வானிலைத் தகவல்கள் அன்றாடம் செய்தி பரப்புச் சாதனங்கள் மூலம் மக்களுக்கு அறிவிக்கப்படுகின்றன.

இன்று புயல், பெருமழைக்கான அறிகுறிகளை செயற்கைக்கோள் வாயிலாகப் பெறப்படும் படங்கள் மூலம் துல்லியமாக அறிந்து கொள்ளும் அரிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் புயல், கடல், கொந்தளிப்புகளை முன்னரே நன்கு தெரிந்து முன்னெச்சரிக்கையுடன் மக்களும் விமானம் மற்றும் கப்பல் துறையினரும் நடந்து கொள்ள இயல்கின்றது. பனிப்பகுதிகளாகிய துருவப் பிரதேசங்களில் தானியங்கி வானிலை நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள கருவிகள் தானாகவே இயங்கித் தகவல்களைத் திரட்டித் தந்து உதவுகின்றன. உலக நாடுகளின் கூட்டமைப்பான உலக வானிலை இயல் அமைப்பு இத்துறையில் உலகளாவிய முறையில் வானிலைத் தகவல்களைத் திரட்டித் தருகின்றது.

கடலில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களும் நிலத்தில் விதைப்பு அல்லது அறுவடை செய்யும் உழவர்களும் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டு, எதிர்பாராத பெருஞ்சேதத்தைத் தவிர்க்க முடிகின்றது. புயற் சின்னம் காணப்படின் அதன் தன்மைக்கேற்ற எண்களோடு கூடிய எச்சரிக்கை கொடி துறைமுகங்களில் ஏற்றப்படும். இவ்வாறு வானிலையியல் மக்களின் அன்றாட வாழ்க்கைப் போக்கோடு இணைந்து செயலாற்றும் இன்றியமையாத துறையாக இன்று விளங்கி வருகிறது.


வானொலி : தொலைக்காட்சிக் கருவி கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு மக்கள் செய்தி கேட்கவும், நாடகம், சொற்பொழிவு போன்ற பிற நிகழ்ச்சிகளைக் கேட்டு மகிழவும் வானொலிப் பெட்டிகளே பெரிதும் பயன்பட்டன. இன்றும்கூட மக்களின் வாழ்வில் இன்றியமையாத அங்கமாக வானொலிப் பெட்டிகள் இருந்து வருகின்றன.

எங்கோ பேசும் பேச்சை, பாடும் பாட்டை பேசும் அல்லது பாடும் அதே நேரத்தில் நாமிருக்கும் இடத்தில் இருந்தபடியே கேட்க முடிகிறது. இதற்குக் காரணம் பேசும் ஒலியை மின் காந்த அலைகளாக மாற்றி வான்வழி அனுப்பப்படுகிறது, வாயு மண்டலத்தில் உள்ள மின்னணு மண்டலம் மின்காந்த ஒலி அலைகளைப் பிரதிபலித்து மீண்டும் பூமிக்கு அனுப்புகிறது. பூமியில் உள்ள நம் வீட்டின் வானொலிப் பெட்டியோடு இணைக்கப்பட்டுள்ள ஏரியல் எனப்படும் 'ஒலி அலை வாங்கி'க் கருவியால் கிரகிக்கப்படுகிறது. இதன் மூலம் வானொலிப் பெட்டியில் அவ்வொலிகள் மீண்டும் எழும்ப நாம் பேச்சையும் பாட்டையும் கேட்டு மகிழ முடிகிறது. பாடுமிடத்திலிருந்து வரும் பேசும் அல்லது பாடும் ஒலி பல மாற்றங்களைப் பெற்று மீண்டும் ஒலியாக வானொலிப் பெட்டியை வந்தடைய ஓரிரு விநாடிகளே ஆகின்றன. இவ்வொலியின் வலிமையை வானொலிப் பெட்டியில் கூட்டவோ குறைக்கவோ இயலும்.

ஒலியைப் பதிவு செய்யும் வானொலி நிலையங்கள் பல்வேறு அலை வரிசைகளில் நிகழ்ச்சிகளைப் பதிவு செய்கின்றன. ஒரே சமயத்தில் இருவேறு நிலையங்கள் ஒரே அலைவரிசையில் நிகழ்ச்சிகளை உருவாக்குவதில்லை. இதற்கெனத் தனி பன்னாட்டு ஒப்பந்தம் உண்டு.