பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

296

வெப்பம்

மட்டுமே காணக்கூடிய மயிரிழைபோன்ற நுண்புழைத் தந்துகிகளையும் மிகச்சிறிய தமனிகளிலிருந்து சிரைகளுக்கு இரத்தத்தைக் கொண்டு செல்லும் நுண்ணிய இரத்த நாளங்களையும் இவர் ஊகமாகவே கண்டறிந்தார்.

இரத்தவோட்டம் பற்றிய இவரது புகழ் பெற்ற நூலான "விலங்குகளின் இதயம் மற்றும் இரத்தத்தின் இயக்கம்பற்றிய உடற்கூற்று ஆய்வு" (An anatomical Treatise on the Movement of the Heart and Blood in Animals) என்பது 1628ஆம் ஆண்டு வெளி வந்தது. இதில் குறிப்பிட்டிருந்த இரத்த ஓட்டம் பற்றிய ஆய்வுகளை பலரும் ஏற்க மறுத்தனர். சிலர் தூற்றவும் செய்தனர். ஆயினும், காலப்போக்கில் ஆய்வுகளால் கண்டறியப்பட்ட மருத்துவ உண்மைகள் இவரது ஆராய்ச்சியின் நுட்பத்தை மெய்ப்பிப்பதாக அமைந்தன. இவரது புகழ் ஐரோப்பாவி வெங்கும் பரவி நிலைபெற்றது. மருத்துவ உலகின் மாபெரும் ஆய்வறிஞர் எனும் சிறப்பைப் பெற்றார்.

இவரது ‘கரு இயல்’ (Embryology) பற்றிய ஆராய்ச்சியும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். 1851ஆம் ஆண்டில் இவர் வெளியிட்ட “விலங்குகளின் தலைமுறை” (On the Generation of Animals) என்ற நூலும் இக் கால கருஇயல் ஆய்வுக்கு அடித்தளமாக அமைந்தனவெனலாம்.

மருத்துவ உலகில் மாபெரும் ஆய்வாளராக விளங்கிய வில்லியம் ஹார்வி 1667ஆம் ஆண்டில் தமது 79ஆம் வயதில் லண்டனில் காலமானார்.


வெப்பம் : உயிர்வாழ்க்கைக்கு இன்றியமையாது தேவைப்படுவது வெப்பமாகும். மனிதர்கள், விலங்குகள் மட்டுமின்றி செடி, கொடி போன்றவைகள் உயிர் வாழவும் வெப்பம் தேவை. முட்டைக் கரு குஞ்சாக மாறுவதற்கும் கூட வெப்பம் தேவை உணவு சமைப்பதற்கு வெப்பம் மிக அவசியமாகும். இயந்திரங்களை இயக்குவதற்கும் வெப்ப சக்தி தேவைப்படுகிறது.

மின்சக்தி, அணு சக்திபோல் அமைந்துள்ள வெப்ப சக்தியை இயற்கையாகவும் செயற்கையாகவும் பெற முடியும். இயற்கையாக சூரியனிடமிருந்து வெப்பத்தை நாம் பெறுகிறோம். விறகு, கரி போன்றவற்றை எரிப்பதன் மூலம் மிகுந்த வெப்ப சக்தியைப் பெற முடியும். இவ்வெப்பத்தின் துணைகொண்டு மின்சக்தியை உற்பத்தி செய்கிறோம். இதை அனல் மின் சாரம் என்கிறோம். அனுப்பிளவை ஏற்படுத்தி அதனால் வெளிப்படும் மிகு வெப்பத்தைக் கொண்டு மின் உற்பத்தி செய்ய முடியும். இதை அணு மின் உற்பத்தி என்று அழைக்கிறோம்.

சாதாரணமாக வெப்பம் எவ்வாறு உண்டாகிறது? பொருள்கள் எரியும்போது ஆக்சிஜனுடன் வேதியல் சேர்க்கை பெற்று வெப்பமாகிறது. இவ்வாறு பலவகை வேதியியல் மாறுபாடுகள் வெப்பம் வெளிப்படக் காரணமாயமைகின்றன. சாதாரணமாக நமக்கு வேண்டிய வெப்பத்தை மரக்கட்டை, நிலக்கரி, பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் போன்றவற்றை எரிப்பதன்மூலம் பெறுகிறோம். இவற்றைக் கொண்டு இயந்திரங்களையும் இயக்குகிறோம். பொருட்கள் ஒன்றோடொன்று உராய்வதனாலும் வெப்பம் உண்டாகிறது. நாம் நம் கைகளை வேகமாக ஒன்றோடொன்று உராய்க்கும்போது வெப்பம் ஏற்படுவதை எளிதாகக் காணலாம். ஆதி மனிதன் அடுப்பு மூட்ட சக்கி முக்கிக் கற்களை வேகமாக உராயச்செய்தும், கடை கோலைக் கொண்டு மரத்தைக் கடைவதன்மூலம் உண்டாகும் வெப்பத்தால் வெளிப்படும் நெருப்புப் பொறிகளைக் கொண்டும் அடுப்பு மூட்டினான் என்பது வரலாறு.

இன்று மின்சக்தி கொண்டு வெப்பமுண்டாக்கிப் பல்வேறு வகைகளில் பயன்படுத்தி வருகிறோம். வெப்பத்தை காலரி எனும் அலகால் அளக்கிறோம். வெப்ப நிலையை சென்டி கிரேடு எனும் அலகால் அளக்கிறோம். வெப்பமும் வெப்ப நிலையும் ஒன்றல்ல. அவை வெவ்வேறானவையாகும். வெப்ப நிலை என்பது வெப்பமுடையதாகத்தான் இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. குளிர்ச்சியாகவும் இருக்கலாம். ஒரு பொருளின் வெப்பநிலை அப் பொருள் எவ்வளவு சூடாகவோ அல்லது குளிர்ச்சியாகவோ உள்ளது என்பதை எடுத்து இயம்புவதாகும். ஒரு பொருளின் வெப்ப அளவு, அஃது எவ்வளவு வெப்ப ஆற்றலைத்தன்னகத்தே கொண்டுள்ளது என்பதைக் குறிக்கும்.

வெப்ப மிகுதியால் பொருள்கள் பல்வேறு மாறுதல்களுக்கு ஆளாகின்றன. மிகு வெப்பத்தின் காரணமாகப் பொருள்கள் உருகு நிலையை அடைகின்றன. இவ்வாறு உருகித் திரவ