பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வெப்ப மண்டலம்

297

நிலையைப் பெறுகின்றன. திரவம் ஆவி நிலையை அடையும் வெப்பத்தின் காரணமாக வேதியியல் மாறுதல்களால் புதிய பொருள் உருவாதலும் உண்டு. இரும்புத் தூளையும் கந்தகப் பொடியையும் கலந்து சூடாக்கும்போது இரும்பு சல்ஃபைடு என்னும் புதிய கூட்டுப் பொருள் உண்டாகிறது. பொருட்கள் வெப்பத்தால் விரிவடைவதும் உண்டு. இரயில் தண்டவாளங்களுக்கிடையே ஆங்காங்கே குறுகிய இடைவெளி விடப்பட்டிருப்பதை கவனித்திருக்கலாம். இதற்கு என்ன காரணம் தெரியுமா? கடுமையான கோடை காலத்தில் வெப்ப மிகுதியால் தண்டவாளம் விரிவடைந்து நீளும். அவ்வாறு நீளும்போது இக்குறுகிய இடைவெளிகளே இடம்பெறுகின்றன. இல்லையென்றால் தண்டவாளம் நீளும்போது வளைந்துவிடும் அதனால் இரயில்கள் முறையாகச் செல்ல இயலாமல் போய்விடும்.

இரும்பின் ஒரு முனையை சிறிது நேரம் நெருப்பில் பிடித்தால் சூடேறிய கொஞ்ச நேரத்தில் மறு முனையும் சூடாகிவிடும். இஃது எப்படி நிகழ்கிறது தெரியுமா? இரும்பு வெப்பத்தை எளிதாகக் கடத்தும் பொருளாக உள்ளது. வெப்பக் கடத்தல் என்பது இரும்பின் அணுவில் படும் வெப்பம் உடனே அடுத்த அணுவை அணு அதிர்வு மூலம் அடைகிறது. இவ்வாறே தொடர் அணு அதிர்வுகளின் மூலம் அடுத்த முனையை வெப்பம் விரைந்து எட்டிவிடுகிறது. வெப்பக் கடத்தல் திடப் பொருட்களிலே நிகழ்கிறது.

வெப்பக் கடத்திகள் 'எளிதில் கடத்தி’ 'அரிதில் கடத்தி’ என இரு வகைகளில் அமைந்துள்ளன. உலோகங்கள் எளிதில் கடத்திகளாகும். கண்ணாடி, மரம், தக்கை, பிளாஸ்டிக் பொருள்கள் அரிதில் கடத்திகளாகும். பாதரசம் திரவ நிலையில் இருந்தபோசிலும் அதுவும் ஒருவகை உலோகமாக இருத்தலால் அஃது எளிதில் கடத்தியாகவுள்ளது. திரவங்களிலும் வாயுக்களிலும் வெப்பம் பரவுவதை வெப்பச் சலனம் என்பர். நாம் ஒரு பாத்திரத்தில் நீரை நிரப்பி அடுப்பில் வைத்துச் சூடாக்கும்போது என்ன நடக்கிறது? பாத்திரத்தின் அடியில் உள்ள நீர் சூடாகி மேல் நோக்கிச் செல்கிறது. மேலேயுள்ள குளிர்ந்த நீர் அடிப்பகுதியை நோக்கி நகர்கிறது. அஃது அடிப்பகுதி சென்று சூடாகி மேல்நோக்கிச் செல்கிறது. இவ்வாறு கொதிக்கும் நீர் கீழ்மேலாக விரைந்து செல்வதையே 'கொதித்தல்’ என்கிறோம். திரவப் பொருளின் மூலக்கூறு வெப்பத்தால் நகர்தலே இச்செயலுக்கு அடிப்படைக் காரணமாகும்.

நெருப்பிலிருந்து வரும் வெப்பம் அடுத்துள்ள பொருள்களை நோக்கிச் செல்வது 'வெப்பக் கதிர் வீசல்' எனப்படும். நாம் நெருப்பு அருகில் அமர்ந்து குளிர்காயும்போது நம் உடல் கொஞ்ச நேரத்தில் வெப்பம் பெறுகிறது. இதற்குக் காரணம் நெருப்பிலிருந்து எழும் வெப்பக் கதிர்வீச்சு நம் உடலை நோக்கிச் செல்வதேயாகும். இம்முறையில்தான் பூமி கதிரவனிடமிருந்து சூரிய வெப்பத்தைப் பெறுகிறது. வெப்பக் கதிர்வீசல் முறையில் கதிர்வீச்சு எப்பொருளில் படுகிறதோ அப்பொாருள் மட்டுமே வெப்பமடைகிறது. இடைப்பட்ட ஊடகம் வெப்பமடைவதில்லை.

குளிர்ந்த பொருளிலுள்ள வெப்பத்தை வெளியேற்றுவதால் அது மேலும் குளிர்கிறது. இவ்வகையில்தான் குளிர்ப்பதனப் பெட்டிகள் செயல்படுகின்றன. அரிதில் கடத்தியான வெற்றிடத்தைக் கொண்டு வெப்பம் வெளியேறாமலோ அல்லது உட்செல்லாமலோ செய்வதன் மூலம் ஒரு வெப்பப் பொருளை அல்லது குளிர் பொருளை அதன் நிலையிலேயே வைத்திருக்க முடியும். இவ்வகையில் அமைந்திருப்பதே தெர்மாஸ் பிளாஸ்க் எனும் வெற்றிடக் குடுவை.


வெப்ப மண்டலம் (hot zone) : கதிரவனிடமிருந்து பூமி வெப்பச் சக்தியைப் பெற்றாலும் உலகம் முழுவதும் ஒரே சீராகப் பெறுவதில்லை. ஒரு சில பகுதிகள் மிகுதியான வெப்பத்தைப் பெறுகின்றன. இன்னும் சில இடங்கள் மிதமான வெப்பத்தைப் பெறுகின்றன. வேறு சில இடங்கள் வெப்பம் குறைந்த குளிர் நிலப் பகுதிகளாக அமைந்துள்ளன. இதற்குக் காரணம் கதிரவனின் வெப்பக் கதிர்கள் நிலத்தின் மீது செங்குத்தாகவோ அல்லது சாய்வாகவோ விழுவதுதான்.

ஒவ்வோராண்டிலும் குறிப்பிட்ட காலங்களில் பூமத்திய ரேகைப் பகுதியில் சூரியன் செங்குத்தாகத் தோன்றும். அவ்வாறு தோன்றும் பகுதிகள் வெப்பம் மிக்கவையாக இருப்பதால் அப்பகுதிகள் வெப்ப மண்டலங்கள் (Torridzones) என அழைக்கப்படுகின்றன. இவ்வாறு தோன்றும் காலம் மார்ச் 21 முதல் செப்டம்பர் 28 வரை என கணித்துள்ளார்கள். பூமத்திய ரேகைக்கு வடக்கே 23½0 தள்ளியுள்ள கடக