பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

அமீபா

பென்சோயிக் அமிலம் உணவுப் பொருட்களை பாதுகாக்கவும், ஆக்ஸாலிக் அமிலம் கரைகளை நீக்குவதற்கும் கார்போனிக் அமிலம் பழரச பானங்களை சீசாக்களில் பாதுகாக்கவும் போரிக் அமிலம் புண்களை கழுவுவதற்கும் பால்மிடிக் அமிலம் செயற்கை சோப்பு தயாரிக்கவும் பயன்படுகிறது.

ஆரஞ்சு, திராட்சை மற்றும் புளிப்புப் பழங்களில் காணப்படும் அஸ்கார்பிக் அமிலம் ஒரு வைட்டமின் ஆகும்.

தலைவலிக்குப் பயன்படுத்தப்படும் ஆஸ்ப்ரினில் காணப்படும் அசிட்டைல் சாலிசிலிக் அமிலம் ஒரு வலி நிவாரணி ஆகும்.

கார் பேட்டரியில் பயன்படுத்தப்படும் திரவம் நீரில் கலந்த சல்ஃபுயூரிக் அமிலமாகும்.

அமீபா : உயிரினங்களிலேயே மிக நுண்ணிய உயிர் அமீபா ஆகும். இது ஓரணு உயிரினத் தொகுதியைச் சார்ந்ததாகும். இதன் முழு உடலும் ஒரே உயிரணுவால் ஆகியதாகும்.

அமீபா சாதாரணமாகக் குளம் குட்டைகளில் நீருக்கடியில் கிடக்கும் கற்கள், அழுகிப்

உருப்பெருக்கி காட்டும் அமீபா

போன இலைகள் ஆகியவற்றின் அடியில் ஊர்ந்து வாழும். அமீபாவை வெறுங்கண்ணால் காண முடியாது. நுண்பெருக்காடியின் துணைக்கொண்டே காண முடியும். இதற்கு நிறமும் கிடையாது; நிலையான உருவமும் கிடையாது. இதன் வடிவம் அடிக்கடி மாறிக் கொண்டேயிருக்கும். இது அதிகமாக நன்னீரிலும் கடற்கரையின் ஈரப்பகுதிகளிலுள்ள மண்ணிலுமே வாழும். சில வகை அமீபாக்கள் மனித உடலிலும் பிராணிகளின் உடலிலும் வாழும். இன்னும் சில வகை அமீபாக்கள் செடிகொடிகளிலும் உயிர் வாழும்.

அமீபா தன் உடம்பின் எப்பகுதியையும் பயன்படுத்தி இடம் பெயர்ந்து செல்லும்.

அமீபா

நகரும் போது புறப்பிளாசப் பகுதியில் ஒரு பிதுக்கம் ஏற்படும். இதனுள் அகப்பிளாசம் பாயும். அப்போது ஏற்படும் உடல் நீட்சி போலிக்கால் எனப்படும். இப்போலிக்காலினுள் உடற்பிளாசம் முழுமையும் பாயும். அப்போது அமீபா இடம் விட்டு இடம் பெயரும்.

அமீபாவின் நடுவில் ஒரு கரும்புள்ளி இருக்கும். இதை உட்கரு என்று கூறுவர். இவ்வுட்கரு இல்லாமல் அமீபாவினால் இயங்கவோ உயிர்வாழவோ முடியாது.

அமீபா நுண்ணுயிர்கட்குப் பிற உயிரினங்களைப் போன்று கை, கால், தலை, வயிறு