பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/44

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

அலைகள்

அவசியத் தேவையை உணர்ந்தார். அத்தகைய பொருளைக் கண்டுபிடிப்பதில் நேரத்தையும் உழைப்பையும் சிந்தனையையும் செலவிட்டார்.

இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf
அலெக்சாண்டர் ஃபிளெமிங்

இவருடைய ஆராய்ச்சி நிலையத்தில் நன்றாக வளர்க்கப்பட்ட நோய் நுண்ணுயிர்கள் வைக்கப்பட்டிருந்தன. அவற்றின்மீது காற்றுப்பட்டு அவை மாசு அடைந்தன. அப்போது உருவான பூஞ்சக்காளானைச் சுற்றியிருந்த வளர்ச்சிப்பகுதியிலிருந்த நோய் நுண்ணுயிர்கள் கரைந்து போயிருந்தன. இதைக் கண்ட ஃபிளெமிங் நோய் நுண்ணுயிர்களுக்கு நஞ்சாக இருக்கக் கூடிய ஏதோ ஒரு புதியபொருள் பூஞ்சக்காளானால் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என்பதை ஊகித்துணர்ந்தார். தொடர்ந்து மேற்கொண்ட ஆய்வின் விளைவாக அதே பொருள் தீங்கிழைக்கும் வேறுவகை நோய் நுண்ணுயிர்களின் வளர்ச்சியைத் தடை செய்வதையும் கண்டறிந்தார். இதை ஆய்வுப்பூர்வமாக மெய்பித்துக் காட்டினார். அந்தப் பொருளுக்கு பூஞ்சக்காளானின் (Pencilium notatum) பெயரைக் கொண்டே 'பென்சிலின்' (Pencilin) என்றே பெயரமைத்தார். இப்புதிய பொருள் மனிதர்களுக்கோ பிற பிராணிகளுக்கோ தீங்கிழைப்பதில்லை. இப்பொருள் மூலம் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் காக்கப்பட்டன. இன்றும் காப்பாற்றப்பட்டு வருகின்றன.

இத்தகு சிறப்புமிகு பென்சிலின் மருந்தைக் கண்டுபிடித்ததற்காக இவருக்கு 1945ஆம் ஆண்டில் உலகப்பெரும் பரிசான நோபெல் பரிசு வழங்கப்பட்டது. ஃபிளெமிங் அதன் பின் பத்தாண்டுகள் வாழ்ந்து 1955ஆம் ஆண்டில் மறைந்தார்.

அலெர்ஜி : இந்த ஆங்கிலச் சொல்லுக்கு ‘ஒவ்வாமை” என்பது பொருளாகும். நாம் உண்ணும் உணவுப் பொருள்களில் சிலவற்றை நம் உடம்பு ஏற்றுக் கொள்வதில்லை. அத்தகைய உடல் ஏற்கா உணவுகளை உட்கொண்டால் தலைவலி, உடல் எரிச்சல் போன்ற உடல் தொல்லைகள் ஏற்படும். இதுவே ஒவ்வாமை நோயாகும்.

சில பேருக்குச் சிலவகை காய்கறிகள் ஒவ்வுவது இல்லை. சிலரது உடல் சிலவகை தானிய உணவுகளை ஏற்பதில்லை. இன்னும் சிலருக்கு சிலவகை பூக்களின் மணம் ஒவ்வுவது இல்லை.

நாம் நாள்தோறும் பயன்படுத்தும் கம்பளி போன்ற பொருள்களும் முகப்பூச்சுத் தூள் (பவுடர்)களும் கூட உடலுக்கு ஒவ்வுவது இல்லை. சிலருக்குக் காற்றில் பறந்து வரும் மென்மையான தூசிகள், பஞ்சு, ஒட்டடை ஒவ்வுவதில்லை. இவற்றால் இருமல், உடல் அரிப்பு, திட்டுத்திட்டாகத் தழும்பு ஏற்படுதல், இன்னும் சிலருக்குச் சளித்தொல்லை தரும் ஈழை நோய்கள், ஆஸ்துமா ஏற்படுவதுண்டு. இதற்கான ஒவ்வாமைப் பரிசோதனை மூலம் எந்தெந்தப் பொருள் உடலுக்கு ஒவ்வாதவை என்பதைக் கண்டறிந்து அவற்றைத் தவிர்த்தால் ஒவ்வாமை நோய் ஏற்படாமல் தடுக்கலாம்.

அலைகள் : கடற்கரையில் நாம் இருக்கும் போது கடல் அலைகள் சிறிதும் பெரிதும் கடற்கரையில் மோதி மறைவதைப் பார்த்திருக்கலாம். கடலில் பேரலைகள் தோன்றுவதைப் போலவே ஏரிகளிலும், குளங்கள், கிணறுகளிலும் அலைகள் ஏற்படுவதுண்டு. ஆனால் இவற்றில் காணும் அலைகள் வேகம் குறைந்த சிற்றலைகளாக இருப்பதோடு சக்தி குறைந்தவைகளாகவும் இருக்கும். நீரின் கொள்ளளவுக்குப் பரப்புக்குமேற்ப அலைகளின் வேகமும் சக்தியும் அமையும். பலத்த காற்றின் போதும் புயலின்போதும் அலைகள் மிக உயரமாக எழுந்து வீழும்.