பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறுவை', 'மருத்துவம்

37

னார். அச்சொற்பொழிவுகளின் தொகுப்பே பிற்காலத்தில் மருத்துவக் கலைக்களஞ்சியமாக மலர்ந்தது.

இஸ்பஹான் மன்னரின் அரவணைப்பில் வாழ்ந்த அவிசென்னா மன்னருடன் ஹமதான் எனுமிடம் நோக்கிச் செல்லும்போது கடுமையாக நோய்வாய்ப்பட்டார். இவரது உதவியாளர்கள் இவர் கூறிய முறைப்படி இவருக்கு மருத்துவம் செய்ய தவறியதன் விளைவாக இவர் 1037ஆம் ஆண்டு காலமானார். ஹமதானிலேயே இவர் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. மருத்துவத்துறை போன்றே அறிவியல் துறையின் பல்வேறு பிரிவுகளின் வளர்ச்சிக்கும் தொடக்க முதலே அரும்பணியாற்றினார். அவையே இன்றைய மருத்துவ அறிவியல் துறைகளின் அடிப்படைகளாக அமைந்துள்ளன.

நவீன மருத்துவத்துறையின் தந்தையாகப் போற்றப்படும் அவிசென்னா பல புதிய கண்டுபிடிப்புகளை வழங்கிச் சென்றுள்ளார்.

திரவப் பொருட்களைக் காய்ச்சி ஆவியாக்கித் தூய்மைபடுத்தும் முறையை முதன்முதல் கண்டறிந்து கூறியவர் இவரே யாகும். கந்தகத் திராவகம், ஆல்கஹால் போன்றவற்றைத் தயாரிக்கும் வழிமுறைகளைக் கண்டறிந்தவரும் இவரே யாவார். தங்கம், வெள்ளி போன்ற உலோகங்களை மென்மைப் பொருளாக்கி மருந்துடன் கலந்து தந்து நோய் தீர்க்கும் புதிய மருத்துவமுறையை அறிந்து கூறியவரும் இவர்தான். ஊசிமூலம் உடலுக்குள் மருந்தைச் செலுத்தி நோய்போக்கும் 'இன்ஜெக்ஷன்' முறையை முதன்முதலில் அறிமுகப்படுத்தி வெற்றி கண்டவர். குழந்தையை அறுவை மருத்துவம் மூலம் கருப்பையிலிருந்து வெளியே எடுக்கும் 'சிசேரியன்’ அறுவை மருத்துவத்தைக் கண்டறிந்தவரும் இவரே. இன்று முக்கியத்துவம் பெற்றுவரும் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை முறைக்கு அடித்தளம் அமைத்துச் சென்றவரும் அவிசென்னாவே ஆவார்.

மருந்தால் மட்டுமல்லாது மனோதத்துவ முறையிலும் நோய்களைப் போக்க முடியும் என்பதை செயல்பூர்வமாக எண்பித்துக் காட்டியவரும் இவரே.

அறுவை மருத்துவம் : மனித குலம் தோன்றிய நாள் தொட்டே நோய்களைப் பற்றி மனிதன் அறிந்திருந்தான். நோய் தீர்க்கும் வழி முறைகளையும் அறிந்திருந்தான். அம்முறைகளில் அறுவை மருத்துவமும் ஒன்றாகும்.

பண்டுதொட்டே மனிதர்கள் அல்லது மிருகங்களுக்கு ஏற்படும் கடுமையான நோய்களைப் போக்கும் முறையில் உடலில் உரிய இடத்தில் கீறித் திறந்து மருத்துவம் முடிந்தபின் அப்பகுதியைத் தைத்து விடுவது வழக்கம். தற்காலத்தில் அறுவை மருத்துவம் வெகு

அறுவை மருத்துவம்

வாக வளர்ந்துள்ளது. அறுவை மருத்துவத்திற்கான கருவிகள் பல கண்டறியப்பட்டுள்ளன. சிக்கலான அறுவையைக் கூட எளிதாகச் செய்துவிட இயலுகின்றது. இதற்காக புதிய மின்னணுக்கருவிகளும் கணிப்பொறிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவ்வகை மருத்துவம் செய்பவர் 'அறுவை மருத்துவர்’ என்று அழைக்கப்படுகிறார். இவருக்கு மருத்துவ அறிவோடு அறுவை மருத்துவம் பற்றிய சிறப்பறிவும் இருக்க வேண்டுவது அவசியமாகும். அவர்களால் மட்டுமே சிறப்பான முறையில் அறுவைமருத்துவம் செய்யமுடியும்.