பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

அனல் மின்சாரம்

அறுவை மருத்துவம் செய்யும்போது நோயாளிக்கு வலி முதலிய வேதனைகள் தோன்றர்மலிருக்க மயக்கமருந்து கொடுப்பர்.

அறுவை மருத்துவம் செய்யவிருக்கும் நோயாளியை முதலில் தேர்ந்த மருத்துவரைக் கொண்டு நன்கு பரிசோதிப்பர், அறுவை மருத்துவம் செய்து கொள்வதற்கான நோயின் அல்லது காயங்களின் தன்மையைக் கண்டறிவர். அறுவை மருத்துவம் செய்து கொள்ளப் போகும் நோயாளி 12 மணி நேரத்துக்கு முன்னதாக உணவு உட்கொள்வதை நிறுத்திவிட வேண்டும். ஆறு மணி நேரத்துக்கு முன்பாக நீர் குடிப்பதை நிறுத்திவிட வேண்டும். நோயாளிக்கு வேண்டிய அளவு தைரியமூட்டி பக்குவமான மனநிலையில் இருக்குமாறு செய்வர்.

அறுவைக்கெனக் குறிப்பிட்ட நேரத்தில், அதற்கென அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ள அரங்குக்குள் நோயாளிக்குத் துய ஆடை அணிவித்துக் கொண்டுசெல்வர். மருத்துவர்களும் உதவியாளர்களும் குறிப்பிட்ட வகையான ஆடைகளை அணிந்து கொள்வர். அத்துடன் தங்கள் வாய். மூக்கு, தலை, கை, கால் முதலியவற்றை உறைகளால் மூடிக்கொள்வர். நோய்க்கிருமி பரவாமல் தடுக்கவே இவ்வேற்பாடு. அறுவைக்குப் பயன்படுத்தப்படும் கருவிகளையும் துணித்துண்டுகளையும் அழுத்த நீராவிக் கலனில் குறிப்பிட்ட நேரம் வைத்திருந்து பின் பயன்படுத்துவர். இதுவே 'ஸ்டெரிலைசேஷன்' அல்லது ‘தொற்று நீக்கம்’ என அழைக்கப்படுவது. உடலில் அறுவை செய்யப்படும் இடத்தைத் தவிர்த்துப் பிறபகுதிகளைத் துணியால் மூடி விடுவர். இரத்தக் குழாய்களை இடுக்கியால் இறுக்கி வைத்து இரத்தப் போக்கைத் தடுத்து விடுவர்.

அறுவை மருத்துவம் முடிந்த பின்னர் அறுவைப் பகுதியை அதற்கென உள்ள நூலால் மூடித் தைத்துவிடுவர். நோயின் தன்மைக்குத் தகுந்தாற் போல் தையல்பகுதி இணையும்வரை நோயாளி படுக்கையில் இருப்பார். குறிப்பிட்ட நாட்களுக்குப்பின் தையல் பிரிக்கப்படும். தையல் போடப்பட்ட இடத்தில் காணப்படும் தழும்பு நாளடைவில் மறைந்துவிடும்.

அனல் மின்சாரம் : நீரைக் கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்யவியலா இடங்களில் அனல் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

அனல் மின் நிலையம்

நீராவியைக் கொண்டு டர்பன்களைச் சுழலச் செய்து மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதுவே அனல் மின்சாரம்’ ஆகும்.

நிலக்கரியை எரிபொருளாகப் பயன்படுத்தி மாபெரும் கொதிகலன்கள் மூலம் நீராவி தயாரிக்கப்படுகிறது. அந்நீராவியை டர்பைன் எனும் சுழலிகளுக்குள் செலுத்தி வெப்ப மின்னாக்கம் உருவாக்கப்படுகிறது.