பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கேற்ப உயிரணுக்களின் பணியும் அமைந்துள்ளதெனலாம். சான்றாக, இரைப்பையில் உள்ள உயிரணுக்கள் உணவுப் பொருள்களைச் செரிமானம் செய்வதில் ஈடுபடுகின்றன. நரம்பில் உள்ள உயிரணுக்கள் செய்தியை மூளைக்குத் தெரிவிப்பதிலும், அங்கிருந்து பெறுகின்ற உத்தரவை உரிய பகுதிக்கு அனுப்பும் பணியையும் செய்கின்றன. அவ்வாறு கண்களில் உள்ள உயிரணுக்கள் பொருட்களைத் தெளிவாகக் கண்டுணரத் துணை செய்கின்றன. அத்துடன் உயிர்வாழ இன்றியமையாத பிராணவாயுவை உடலின்

உயிரணு வகைகள்

பிற பகுதிகளுக்குக் கொண்டு சேர்ப்பதும் உயிரணுக்களே ஆகும். உடலுக்குத் தீங்கு செய்யும் நோய்க் கிருமிகளை வளரவிடாமல் உயிரணுக்கள் எதிர்த்துப் போரிடுகின்றன. இவ்வாறு உயிரணுக்கள் எல்லா வகையிலும் உயிரினங்களின் இன்றியமையாதனவாக இருந்து உயிர்வாழத் துணைபுரிகின்றன.

இனி, உயிரணுவின் அமைப்புப் பற்றி ஆராய்வோம். ஒவ்வொரு உயிரணுவையும் ஜவ்வு போன்ற ஒரு மேலுறை மூடியிருக்கும். இந்த உறையினுள் புரோட்டோப்பிளாசம் எனும் உயிர்ப் பொருள் உள்ளது. இது வழவழப்பாக இருக்கும். இதற்கு நிறம் ஏதும் இல்லை. உயிரணுக்கள் உயிரோடிருந்து செயல்படுவதற்கு இவ்வுயிர்ப்பொருளே அடிப்படை ஆதாரம். இது இல்லையேல் உயிரணு மடிந்துவிடும். இஃது கூழ்போன்றிருப்பினும் தமக்கு வேண்டிய உணவையும் பிராண வாயுவையும் பெற்றே உயிர் வாழ்கின்றன. தங்களின் கழிவுகளையும் அவ்வப்போது வெளியாக்குகின்றன.

உயிர்ப் பொருளாகிய புரோட்டோப்பிளாசத்தின் நடுவில் ஒரு திரள் இருக்கும். இது மேலுறை வழவழப்பான சைட்டோப்பிளாசம் போன்றவைகளை விடச் சற்று கெட்டியாக இருக்கும். இதுவே உயிரணுவின் உட்கரு. இஃது இன்றி உயிரணு உயிர் வாழவும் இயலாது. நமது உடலில் உள்ள உயிரணுக்களைப் போன்றே தாவரங்களின் உயிரணுக்களும் அமைந்துள்ளன. ஆனால் அவற்றைச் சுற்றிலும் கெட்டியான தடுப்புச் சுவர் உண்டு. இஃது செல்லுலோஸால் ஆகியது.

உயிரணுக்கள் இனப்பெருக்கம் செய்வது விந்தையானதாகும். நன்கு வளர்ச்சிபெற்று முதிர்ந்த உயிரணு இரண்டாகப் பிளவு பெற்று தனித்தனி உயிரணுக்கள் ஆகும். இவ்வாறே உயிரணுக்கள் ஒன்று இரண்டாக ஆவதன் மூலம் பெருக்கமடைகின்றன.

பல உயிரணுக்கள் ஒன்றிணைந்தே திசுக்களாகின்றன. இத்திசுக்களெல்லாம் சேர்ந்ததே நம் உடல்.

முதன்முதலாக உயிரணுக்கள் பற்றிய பல அறிவியல் நுட்பங்களை ஆராய்ந்து உலகுக்குக் கூறித் தெளிவு படுத்தியவர் ராபர்ட் ஹக் என்பவராவார். இங்கிலாந்து நாட்டைச்

6