பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

போன்ற இயற்கைக் கழிவுப் பொருட்கள் நிலத்திற்கு உரமாக இடப்படுகின்றன. இவையும் இயற்கை உரங்களேயாகும். மேலும், அன்றாடம் கூட்டிப் பெருக்கும் குப்பை கூளங்களை குழியிலிட்டு கழிவு நீரைப் பாய்ச்சி உரமாக்குவதும் உண்டு. இது கம்போஸ்ட் அல்லது கலப்பு உரம் அல்லது தொழு உரம் என அழைக்கப்படுகிறது.

சத்திழக்கும் மண்ணுக்கு மேலும் வளமூட்ட இயற்கை உரங்களின் தன்மைகளைக் கொண்ட செயற்கை உரங்களை வேதியியல் அடிப்படையில் தயாரிக்கிறார்கள். இவ்வகை உரங்கள் நைட்ரஜன், பாஸ்வரம், பொட்டாசியம் போன்ற வேதியியற் பொருள்களின்றும் தயாரிக்கப்படுகிறது. இயற்கை உரம், கலப்பு உரம் இவற்றோடு வேதியியல் உரங்களும் மண்ணிற்குச் சத்தூட்டி தாவரப் பயிர்கள் செழித்து வளர வழிகோலுகின்றன.

நிலத்தின் தன்மை, விளைவிக்கப்படும் பயிரின் இயல்பு, தட்பவெப்ப சூழ்நிலை ஆகியவற்றிற்கேற்ப தேவைப்படும் சத்தை எவ்வகை உரத்தின் மூலம் பெறுவது என்பதைத் தீர்மானித்து அவ்வகை உரத்தை நிலத்திற்கு இடவேண்டும். அப்போதுதான் விரும்பிய பலன் கிட்டும். உரமிடுவதற்கென தனி எந்திரங்களும் உண்டு.

அறிவியலின் வளர்ச்சி காரணமாக உற்பத்தியைப் பெருக்க, நல்ல தரமான விளை பொருட்கள் கிடைக்க, செயற்கை உரங்கள் பெருமளவில் தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன.

உருப்பெருக்கும் கண்ணாடி (Magnifying Class) நம் கண்களுக்குப் புலப்படாத நுண்ணிய பொருட்களை பெரிதாக்கிக் காட்டும் கண்ணாடியே ‘உருப்பெருக்கும் கண்ணாடி' இக்கண்ணாடியின் மூலம் கண்ணுக்குப் புலனாகாதவற்றின் உருவைப் பெரிதாகக் கண்டு அவற்றை ஆராய முடிகிறது.

ஒரு குவிலென்சின் குவிய நீளத்தைவிடக் குறைந்த தொலைவில் ஒரு பொருளை வைத்துப் பார்த்தால் அதன் அளவு பெரிதாகத் தெரியும். இதற்குக் காரணம் பொருளிலிருந்து வரும் ஒளிக்கதிரானது லென்சை அடையும்போது அங்கு ஒருவித மாயத் தோற்றத்தை உண்டாக்குகிறது. இது எளிய முறையில் உருவைப் பெருக்கிக் காட்டும் கண்ணாடியாகும். இதை மைக்ராஸ்கோப் என்றும் கூறுவர்.

உருளைக்கிழங்கு : நாம் அன்றாடம் உண்ணும் உணவுப் பொருட்களில் முக்கியமானதாக அமைந்திருப்பது உருளைக்கிழங்காகும். ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் வாழும் மக்களுக்கு உருளைக்கிழங்கு அன்றாடம் உண்ணும் முக்கிய உணவுப் பொருளாக அமைந்துள்ளது.

உருளைக்கிழங்குப் பயிரின் தண்டு மண்ணுள் புதைந்து கிழங்காகிறது. எனவே இது தண்டுக்கிழங்கே தவிர வேர்க்கிழங்கு அன்று.

இளஞ்செடியாக இருக்கும்போது இதன் தண்டு மெல்லியதாக இருக்கும். இது மண்ணுள் சென்று மேலும் பல தண்டுகளாகப் பிரியும். அவ்வாறு பிரிந்து பரவும் தண்டுகளின் நுனியில் கிழங்குகள் தோன்றும். இந்தக் கிழங்குகளில் குழிவானபகுதிகளில்வேர்போன்ற மயிரிழையோடு கூடிய பல கண்கள் இருக்கும். கண்ணுள்ள துண்டுகளாகக் கிழங்கை நறுக்கி மண்ணில் நடுவார்கள். அவை செடியாக முளைத்து செழித்துப் படர்ந்து தண்டுகளை மண்ணுள் பரப்பும். இவ்வாறு உருளைக் கிழங்கு பயிரிடப்படுகிறது.

உருளைக் கிழங்குப் பயிரின் இலைகள் இறகைப் போன்று தோற்றமளிக்கும். மலர்கள் வெண்மை கலந்த ஊதா நிறமுள்ளது. பூக்கள் கொத்தாகப் பூக்கும். இதிலிருந்து காயும் பழமும் தோன்றும். அவை திராட்சை போன்று இருக்கும். இப்பழங்களில் 209, 800 விதைகள் வரை இருக்கும். ஆயினும் விதையிலிருந்து உருளைக்கிழங்குப் பயிர் செய்யப்படுவதில்லை. உருளைக்கிழங்கையே துண்டாக்கி நட்டே பயிர் செய்கிறார்கள்.

உருளைக்கிழங்கு இன்று உலகெங்கும் பயிரிடப்பட்டபோதிலும் இதன் தாயகம் அமெரிக்காவில் உள்ள சிலி, பெரு, மெக்சிகோ நாடுகளில் உள்ள மேட்டுப் பகுதிகளேயாகும். இங்குதான் தொடக்கக் காலத்தில் காட்டுப் பயிராக உருளைக்கிழங்கு விளைந்து வந்தது. 1570இல் அமெரிக்கா வந்து திரும்பிய ஸ்பானியர் அதனைத் தங்கள் நாட்டில் பயிரிடலாயினர். பின்னர், ஐரோப்பாவெங்கும் பரவியது. 17ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் போர்ச்சுகீசியர் மூலம் உருளைக்கிழங்கு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.