பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

உலோகங்கள்

டும் பிரதிபலிக்க வெப்பம் மிகும். இவ்வாறு மிகுதிப்படும் வெப்பம் உள்ளே இடப்பட்டிருக்கும். தாதுவின் மீது பிரதிபலித்து மேலும் மேலும் வெப்பத்தை மிகுதிப்படுத்தும். இவ்வாறு அதிகரிக்கும் வெப்பத்தில் எஃகு, செம்பு போன்ற தாதுக்கள் உருகும். கண்ணாடியை உருக்கவும் இத்தகைய உலைகளே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.

எஃகுத் தயாரிக்கப் பயன்படும் உலை 'திறந்த ஊது உலை' (Open Hearth Furnace) யாகும். இவ்வுலையில் தனியாக்கப்பட்ட இரும்பைப் போட்டு சூடாக்குவர். உருகிக் குழம்பான இரும்பிலுள்ள கசடு நீக்கப்பட்ட இரும்புடன் கரி, குரோமியம், நிக்கல் போன்ற உலோகங்கள் சேர்க்கப்பட்டு எஃகு தயாரிப்பர். இதனால் இரும்பைவிட எஃகுக் கடினமானதாக இருக்கும்.

நடத்தப்படும் வினைகளுக்கு ஏற்றவாறு உலைகள் தெரிந்தெடுக்கப்பட்டு உலோகவியலில் உலோகங்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன.

உலோகக் கலவைகள் (Aloys) : பெரும்பாலான உலோகங்களை அப்படி அப்படியே நாம் பயன்படுத்துவதில்லை. அவற்றை ஒன்றுடன் மற்றொன்றைக் குறிப்பிட்ட அளவில் கலந்தே பயன்படுத்துகிறோம். உதாரணமாகத் தங்கத்தை அப்படியே பயன்படுத்துவதில்லை. காரணம் சுத்தத் தங்கத்தில் நகை செய்ய இயலாது. பதினொரு பங்குத் தங்கத்துடன் ஒருபங்கு செம்பு சேர்த்தால்தான் நகை செய்ய இயலும். இவ்வாறே ஒன்பது பங்கு வெள்ளியுடன் ஒரு பங்கு செம்பு சேர்த்தே நகைகளும் பாத்திரங்களும் செய்ய இயலும். இவ்வாறு ஒரு உலோகத்தைக் கலப்பதே உலோகக் கலவையாகும்.

வெண்கலம் என்பது தனி உலோகம் அன்று. எட்டுப் பங்குச் செம்புடன் இரண்டு பங்கு வெள்ளீயம் கலந்த கலவையே வெண்கலமாகும். இக்கலவை மிக உறுதிவாய்ந்ததாகும். நல்ல ஓசை உண்டாக்க வல்லதாகும். எனவேதான் கோயில் மணிகள் வெண்கலத்தால் செய்யப்படுகின்றன.

நம் வீட்டில் பித்தளைப் பாத்திரங்கள், கதவுக் கைப்பிடிகள், தாம்பாளத் தட்டுகள், தம்ளர்கள் இருப்பதைப் பார்க்கிறோம். இப்பித்தளை உலோகம் செம்புடன் துத்தநாகத்தைச் சேர்ப்பதன் மூலம் உருவாக்கப்படுகிறது.

இரும்புடன் கரி சேர்க்கப்பட்டு உருவாக்கப்படுவதே எஃகு உலோகம்.

எஃகு தற்காலத்தில் பெருமளவில் பயன்படுத்தப்படுவதால் தற்காலத்தை எஃகுக் காலம் என்றுகூட அழைக்கலாம். அதிலும் எஃகு உலோகக் கலவைகள் எண்ணற்ற வேலைகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.சான்றாக நிக்கல் எஃகு மோட்டார், விமானம் உதிரி பாகங்களைத் தயாரிக்கப்பயன்படுகிறது.குரோமியம், வனேடியம், எஃகு, கம்பிச் சுருள்கள், மிகவும் கடினமான உதிரிபாகங்கள் தயாரிக்க பயன்படுகிறது.

உலோகங்கள் : மனிதகுல நாகரிக வளர்ச்சியை உலோகங்களைப் பயன்படுத்திய காலத்தையொட்டியே கற்காலம், இரும்புக்காலம் எனப் பிரித்தறிவார்கள். உலகில் உள்ள நூற்றுக்கு மேற்பட்ட தனிமங்களில் பெரும்பாலானவை உலோகங்களேயாகும்.

உலோகங்கள் திட நிலையிலும் திரவ நிலையிலும் உள்ளன. பாதரசமும் உலோகமேயாகும். இது திரவ நிலையில் கிடைக்கும் உலோகமாகும். மற்ற உலோகங்கள் சாதாரண வெப்ப நிலையில் திட நிலையிலேயே இருக்கும்.

உலோகங்களில் ஒரு சிலவற்றைத் தவிர மற்றவைகட்குத் தனி நிறம் என்று ஏதுமில்லை. தங்கம் மஞ்சள் நிறமுடையதாகும். செம்பு ஒருவகை இளஞ்சிவப்பு நிறமுடையதாகும். உலோகங்களில் பலவும் பளபளப்புத் தன்மையுடையவையாகும். எனினும் இவற்றில் பலவும் ஈரக்காற்றுப் படும்படியான இடங்களில் பல நாட்கள் இருக்க நேரின் துருப்பிடிக்கும். துருப்பிடிக்காத உலோகங்களுக்கு தங்கம், வெள்ளி, பிளாட்டினம் போன்ற உயர் தர உலோகங்களைச் சான்றாகக் கூறலாம். துருப்பிடிக்காத இவ்வுலோகங்கள் நகைகள் செய்ய ஏற்றனவாக உள்ளன.

உலோகங்கள் அனைத்துக்குமே ஒரு பொதுத்தன்மை உண்டு. அடித்தால் உடையாமல் நெகிழ்ந்து கொடுக்கும் தன்மையே அது. இதனால் உலோகங்களை அடித்து வளைத்து நமக்குத் தேவையான வடிவங்களில் உருவமைத்துக் கொள்ளலாம். சம்மட்டி போன்ற கனமான பொருள்களால் அடித்து வளைக்கலாம்; கம்பியாக நீட்டலாம். உருக்கி