பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

இனிமையையுந் தரும். பசுமைத் தோற்றத்தை வழங்கிய அம்மலைத் தொடர்ச்சி நீண்டதூரம் சென்றிருந்தது. அது போலவே, அதன் உயரமும் கண்ணுக்கெட்டும் தூரத்துக்கு மேல் வளர்ந்திருந்தது. அம்மலையின் ஒரு பக்கத்திலிருந்து நீர் அருவி இனிய ஒசையோடு இடையறாது கீழ்நோக்கி ஒடிக்கொண்டேயிருந்தது. இவ் அருவி எவ்விடத்துச் சென்று முடிகிறதென்று தெரியவில்லை.

நான் நின்றிருந்த பாதை மிகக் குறுகியதும், கரடு முரடானதுமாகும். அதன் வலப்பக்கத்தில் காட்டுப் பூஞ்செடிகளும், பெரிய மரங்களும் அடர்ந்த புதர்களும் வரிசை வரிசையாக வளர்ந்திருந்தன. அவைகளில் பூக்கள் கொத்துக் கொத்தாக மலர்ந்திருந்ததோடு அவைகளைப் பறிப்பாரில்லாமையால், அவைகளாகவே கீழே உதிர்ந்திருந்தன. அம்மலர்களிலிருந்து வழிந்தொழுகும் தேனைக் குடித்துச் சில வண்டுகள் மயங்கி வீழ்ந்திருந்தன. சில வண்டுகள் செடி கொடிகளைச் சுற்றிச் சுற்றி ரீங்காரஞ் செய்துகொண்டிருந்தன. இவ்வாறு வண்டுகளின் ரீங்காரமும் பறவைகளின் கூக்குரலும், நீர் வீழ்ச்சியின் ஒசையும் ஒன்று சேர்ந்து, என் உள்ளத்தை என்றுமில்லாதவாறு குதூகலிக்கச் செய்தது. பொழுது சாயும் அந்நேரத்தில் மக்கள் நடமாட்டஞ் சிறிது மில்லாததும், கொடிய மிருகங்கள் நிறைந்ததும், காடாந்தகாரமுமான அவ்விடத்தில், உலகத்தை வெறுத்து உயிரைத் துரும்பாக நினைக்கும் என் போன்ற பைத்தியக்காரர்களன்றி, எவ்வளவு மனத்திண்மையும், வீரமும் வாய்ந்தவர்களாயினும் தனித்திருக்கத் துணியமாட்டார்கள் என்பது திண்ணம்.

உலக மக்கள் செய்யுங் கொடுமையைக் கண்டு சகிக்காமலோ என்னவோ, சூரியன் கோபத்தால் முகஞ் சிவக்க