பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

121

வியாபாரிகளிடமிருந்து என்ன சுங்கத்தீர்வை வசூலிக்கிறார்களோ அதே தீர்வைதான். நாட்டிற்குள் நுழையும் பிற நாட்டு, பிற சமய வணிகர்களிடமிருந்தும் வசூலிக்கப்பட வேண்டும்” எனப் பதில் அளித்தார் கலீஃபா.

இதே முறையில்தான் பாரசீகத்திலிருந்து வருபவர்களிடமிருந்தும் சீனாவிலிருந்து வரும் வணிகர்களிடமிருந்தும் சுங்கத்தீர்வை வசூலிக்கப்பட்டது.

ஏதாவது ஒரு நாட்டிற்குள் நுழையும் முஸ்லிம் வணிகர்களிடமிருந்து அந்நாட்டினர் சுங்கத் தீர்வை வசூலிக்க வில்லையெனில், அந்நாட்டவர் இஸ்லாமிய நாட்டினுள் வணிகத்திற்காக நுழையும்போது அவர்களிடமிருந்து சுங்கத் தீர்வை எதுவும் வசூலிக்கப்படுவது இல்லை.

இவ்வாறு பிற சமயத்தைச் சார்ந்த வெளிநாட்டு வணிகர்களுக்கென தனி சுங்கத் தீர்வை எதையும் வசூலிப்பது இஸ்லாமிய அரசின் நோக்கமாக இருக்கவில்லை. அது மட்டுமன்று, எந்த வேற்றுநாட்டிலாவது பெண்கள் பயன்படுத்தும் பொருட்களின்மீது சுங்கத் தீர்வை வசூலிக்கப் படாத நிலையில், அப்பெண்களின் பொருட்களுக்கு முஸ்லிம்களின் இஸ்லாமிய நாட்டில் சுங்கத் தீர்வை வசூலிக்கப்படுவதில்லை என்பது கவனிக்கத் தக்கதாகும்.

இதற்காகப் பெண் தொடர்பான எல்லா விஷயங்களுமே இஸ்லாமிய ஆட்சியினரால் அப்படியே பின்பற்றப் பட்டன என்பதில்லை. சான்றாக, எகிப்து நாட்டை முஸ்லிம்கள் வெற்றி கொள்வதற்குமுன் நைல் நதிப் பெருக்கெடுக்கவில்லையென்றால் ஒரு அழகிய பெண்ணை, நன்கு அலங்கரித்து நைல் நதியில் தள்ளி மூழ்கடிப்பார்கள். பெண்ணைப் பரிசாகப் பெற்ற நைல் நதிக் கடவுள் மகிழ்ந்து பொங்கியெழும் என்பது அவர்தம் நம்பிக்கையாக இருந்தது.