பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

123


உமர் (ரலி) அவர்கள் கலீஃபாவாக இருந்த கால கட்டத்தில் முஸ்லிம்கள் இந்திய மண்ணில் ஆட்சி அமைத்தனர். அப்பகுதியில் வாழ்ந்த இந்துக்களிடையே கணவன் இறந்து விட்டால், அவனுடன் அவன் மனைவி யையும் சேர்த்து எரியூட்டும் ‘பெண் உடன்கட்டை ஏறும்’ கொடிய பழக்கம் இருந்து வந்தது. மனைவிக்கு முன்னதாகக் கணவன் இறந்து விட்டால், அவனை எரியூட்டும் சிதையில் அவனது விதவை மனைவி பாய்ந்து கணவனோடு அவளும் எரிந்து இறக்க வேண்டும். மனைவி தானாகத் தீயுட் புக மறுத்தாலும் அவள் கட்டாயமாக உடன் கட்டையேறி கணவனோடு சேர்த்துக் கொல்லப்பட்டு விடுவாள். கணவன் உயிரோடிருக்க மனைவி இறந்து விட்டால், அவன் மனைவியோடு உடன்கட்டை ஏற வேண்டியதில்லை. இரு மனம் ஒன்றிணையும் புனித மிகு திருமணம் இத்தகைய ‘உடன்கட்டை ஏறும்’ கொடிய பழக்கத்தால் கொச்சைப்படுத்தப்பட்டு வந்தது.

இக்கொடிய பழக்கத்தை அறிந்த இஸ்லாமிய ஆட்சியினர் தங்கள் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் இக் கொடிய பழக்கத்தை உடனடியாக நிறுத்தி பெண்ணினத்தைக் காத்தனர். ஹிந்துக்களின் நம்பிக்கையின் வாய்ப்பட்ட செயல் என்பதற்காகவும் சமய சகிப்புணர்வோடு முஸ்லிம்கள் வாளாயிருந்து வேடிக்கை பார்க்கவில்லை. நன்மையின் பாற்பட்ட செயல்களின்பால் தங்கள் சமய சகிப்புணர்வைக் காட்டி அந்நற்செயல் மேலும் பரிமளிக்கச் செய்தனர். சமயச் சகிப்புத் தன்மையின் பேரால் முஸ்லிம்கள் தீமைக்குத் துணை போகவில்லை என்பதுதான் வரலாறு புகட்டுகின்ற உண்மை.

முஸ்லிம்கள் எந்த நாட்டிற்குச் சென்றார்களோ அந்த நாட்டில் வழங்கும் சமயக் கொள்கைகளில் அநாவசியமாகத் தலையிடுவதே இல்லை. “அவர்கள் மார்க்கம் அவர்