பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

127


இதைக் கேட்டு ஆர்வத் தூண்டலால் உந்தப்பட்ட நான் பொறுமை இழந்தவனாக, ‘விவரமாகக் கூறினால் தானே தெரியும்’ எனக் கூறி முடிக்குமுன் அவர் கூறினார்.

“அப்போது உமர் (ரலி) ஆட்சி அரபகத்தில் நடந்து வந்தது. உலகெங்கும் இஸ்லாத்தைப் பரப்பவும் அண்டை நாடுகளின் நட்பை, நல்லெண்ணத்தைப் பெறவும் அவரது தூதுவர்கள் எங்கும் சென்றனர். “தாங்கள் யாருக்கும் எச்சமயத்தவர்கட்கும் எதிரானவர்கள் அல்ல; எங்கள் மார்க்கமான இஸ்லாம் எந்த ஒரு சமயத்துக்கும் எதிராக உருவானதல்ல என்பதை உணர்த்தும் வகையில் இம்மாதா கோயிலின் மண்டபத் தூண்கள் பன்னிரண்டும் உருவாக உதவியவர் உமர் (ரலி) என்பது வரலாற்றுச் செய்தி” எனப் பாதிரியார் உருக்கமாக விளக்கியபோது என் கண்கள் பனித்துவிட்டன. எவ்வளவு பரந்த மனப்பான்மையோடும் சகிப்புணர்வோடும் பிற சமயங்களை அணுகியிருக்கிறார்கள். பிற சமயங்களை சகோதர சமயமாகக் கருதும் சமயப் பொறையும் கண்ணோட்டமும் அண்ணலாரின் வழிமுறையாகவும் திருமறை புகட்டும் வாழ்வியல் நெறியாகவும் அமைத்து வழிகாட்டும் தகைமையை நெஞ்சார நினைத்துப் போற்றினேன்.

இந்தியச் சமயங்களில் இஸ்லாமியத் தாக்கம் எத்தகையது என்பதை அறியுமுன் இந்தியக் கலாச்சாரத்தின் தனித் தன்மை எத்தகையது என்பதை அறிவது அவசியமாகும். அப்போது தான் இந்தியப் பண்பாட்டின் சகிப்புத் தன்மையையும் இஸ்லாத்தின் சமயநல்லிணக்கப் பண்பையும் நாம் உய்த்துணர முடியும்.


என்றும் உயிர்ப்புடன் விளங்கும்
இந்தியக் கலாச்சாரம்

உலகிலுள்ள மிகப் பழமையான கலாச்சாரப் பண்பாடு