பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

132

போன்றவை பாரசீக மொழியில் பெயர்க்கப்பட்டு, பின்னர் அதிலிருந்து ஐரோப்பிய மொழிகளில் பெயர்க்கப்பட்டன.

கட்டடக் கலையும் இசை, ஓவியக் கலைகளும் இஸ்லாமியப் பண்பாட்டின் அடிப்படையில் அமையலாயின. அராபிய மருத்துவ முறையான யுனானி இந்திய மருத்துவத்துறையில் செல்வாக்குப் பெற்றது. அதே போன்று எழுத்துக்கலை (Calliography)யும் கைத்தறித் தொழில் துறையும் தனி முத்திரை பதித்து இந்தியத் தொழில்துறை வளர்ச்சிக்கு வளமூட்டின.

இந்திய மன்னர்களான முஸ்லிம் அரசர்கள்

இந்தியாவின்மீது வெளிநாட்டாரின் படையெடுப்புகள் பல்வேறு வடிவங்களில், வகைகளில் அமைந்தன. வைதீக சமயத்தவர்களான ஆரியர்கள் படையெடுப்பாளர்களாக வந்தபோதிலும் இங்கேயே நிரந்தரக் குடிகளாக ஆனார்கள். பின்னர் இஸ்லாமியர்கள் வந்தார்கள். அவர்கள் முதலில் வணிகர்களாகவும் மாலுமிகளாகவும் வந்தார்களேயன்றி நாடாளும் நோக்கில் வரவில்லை. சிந்துவை ஆண்ட மன்னன் அங்கு வாணிகம் செய்துவந்த அரபு வணிகர்களுக்குப் போதிய பாதுகாப்புத் தரத் தவறியதால்தான் முஹம்மது பின் காஸிம் என்பவர் முதன்முதலாக சிந்துவின் மீது படையெடுப்பு நடத்த நேர்ந்தது என்பது வரலாற்று உண்மை. அதன்பின் முஹம்மது கோரி இந்தியப் படையெடுப்பை நடத்திய போதிலும் ஆட்சி செலுத்தவில்லை. இந்தியாவின் முதல் முஸ்லிம் மன்னர் என வரலாற்றாசிரியர்கள் வர்ணிக்கும் குதுப்உத்தீன் முற்றிலும் இந்தியராக மாறி இந்திய மன்னராகவே ஆட்சி செலுத்தினார். இந்தியாவுக்கு வெளியே அவருக்கு நாட்டமில்லாதது மட்டுமல்ல, எந்த ஒட்டும் உறவும் அறவே இல்லாதவராக, இந்திய மன்னராகவே ஆட்சி செய்து வந்தார். அவருக்குப் பின் ஆட்சிக் கட்டில் ஏறிய முஸ்லிம்