பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

138


தவ்ஹீது எனும் ஏகத்துவ நறுமணம் வீசும் இந்தியா

இஸ்லாமிய நெறிக்கும் இந்திய மண்ணுக்கும் நெருங்கிய தொடர்பு எப்போதும் இருந்து வந்திருக்கிறது. இறையருள் பெற்ற திருநாடாகவே பெருமானார் இந்திய நாட்டைக் கருதி பாராட்டி வந்தார். ஆதி மனிதரும் நபியுமான ஆதம் (அலை) பிறந்த பெருமைமிகு பூமி. ஏகத்துவக் கொள்கை முளைவிட்ட புனித மண். இங்கிருந்தே தவ்ஹீது நறுமணம் உலகெங்கும் பரவியது. இதை மெய்ப்பிக்கும் நிகழ்ச்சி ஒன்று அண்ணலார் வாழ்வில் நடைபெற்றது.

காபா இறையில்லத்தில் ஹஜ்ருல் அஸ்வத் (கருநிறக் கல்) பதிக்கப்பட்டுள்ள மூலைப்பகுதி ‘ருக்னுல் ஹிந்த்’ என்ற பெயரால் அழைக்கப்பட்டு வருகிறது ‘ருக்னுல் ஹிந்த்’ என்றால் ‘இந்தியாவை நோக்கும் மூலை’ என்று பொருள்.

இந்த மூலைப் பகுதியில் தொழுகைக்குப் பிறகு, இந்தியாவை நோக்கியவண்ணம் திறந்த மார்போடு அண்ணலார் அவர்கள் நிற்பது வழக்கம். அப்போது அத் திக்கிலிருந்து வீசும் தென்றல் காற்று அவர் மார்பில் படும்போது அவருக்கு மிகவும் இதமாக இருக்கும். அதை நாயகத் திருமேனி வெகுவாக ரசித்து மகிழ்வதுண்டு. பலப்போதும் பெருமானார் இவ்வாறு செய்வதைக் கண்ட நபித் தோழர்கள், ‘பெருமானார் இவ்வாறு செய்வதற்கு ஏதேனும் சிறப்புக் காரணம் உண்டா?’ என அண்ணலாரை வினவலாயினர். அதற்கு விடையாகப் பெருமானார் அவர்கள்.

“ஹிந்த் (இந்தியா)விலிருந்து தென்றலாக வீசிக் கொண்டிருக்கிற தவ்ஹீது (ஏக தெய்வ வணக்கம்)னுடைய சுகந்தத்தை, சுகத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்” எனக் கூறினார்களாம்.