பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

139


இதிலிருந்து இந்திய நாடு பண்டுதொட்டே ஏக இறை வணக்கக் கோட்பாட்டின் நிலைக்களனாக விளங்கிவந்த, இறையருள் பொழியும் புனித பூமி என்பது தெளிவாகிறது. இந்தியாவில் பொங்கிப் பொழியும் ஆன்மீக மாண்பு பெருமானாரிடம் அளப்பரிய மதிப்பை ஏற்படுத்தியிருப்பதையும் நம்மால் நன்கு உணர முடிகிறது. எனவே, வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் ‘ஹிந்த்’ (இந்திய) நாட்டைப் புகழத் தவறியதே இல்லை.

பிற்காலத்தில் பல தெய்வ வணக்கமுறை இந்தியாவில் உருவான போதிலும் முற்கால இந்தியாவில் ஏக தெய்வக் கொள்கையே நிலவி வந்ததை, முந்தைய இந்திய வேதங்களின் அடிநாதக் கொள்கையாக ஏகத்துவ இறைக் கோட்பாடு விளங்கி வந்தது என்பதை வேத விற்பின்னர்கள் பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர். இதையே இந்திய ஆதி வேதமான ரிக் வேதம் ‘ஏகேஸ்வர மார்க் (கம்)’ எனக் கூறுகிறது. இதையே ரிக் வேத சுலோகமான ‘ஏகம் ஸத்விப்ராபஹாதா வதந்தி’ என்பது தெளிவாக்குகிறது. இதிலிருந்து இந்தியாவின் ஆதி வேதக் கொள்கை ஏக தெய்வ வணக்கமே என்பது உறுதியாகிறது. எனவே, இந்தியாவை ஏகத்துவ மணம் கமழும் புனித பூமியாக அண்ணலார் புகழ்ந்ததில் வியப்பேதுமில்லை.

அதுமட்டுமல்ல, ஆதிவேதமான ரிக் வேதம் உட்பட இந்திய வேதங்கள் பலவும் இறுதித் தூதராக முஹம்மது நபி (சல்) அவர்கள் இறைவனால் அனுப்பப்படுவார் என்பதை முன்னறிவிப்பு செய்துள்ளன என்பது எண்ணத்தக்க செய்தியாகும். ரிக் வேதம் ‘மாமஹே’ (முஹம்மது) இறுதி இறைத்தூதராக வருவார் என இரண்டு இடங்களில் குறிப்பிட்டுள்ளது. சாம வேதம், ‘அஹ்மத்’ என்றும் அதர்வண வேதம் ‘மஹாமத்’ (முஹம்மது) எனவும் இறுதித் தூதரின் பெயரைக் குறிப்பிடுகின்றன.