பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

162

சகிப்புணர்வோடு அவற்றைக் காக்கும் சமய தாராளக் கொள்கையின் விளைவாகவே பழம்பெரும் யூத, கிருஸ்துவ வணக்கத் தலங்கள் பலவும் இன்றளவும் நிலை பெற முடிந்தது என்பதுதான் வரலாறு தரும் பேருண்மை.

சமய உணர்விலா ‘நாடாளும் மன்னர்கள்’

முஸ்லிம் மன்னர்களாகட்டும் ஹிந்து மன்னர்களாகட்டும் வீரத்தை வெளிப்படுத்தும் வகையில் போரிடுவதோடு நாடு பிடிக்கும் வேட்கையுடையவர்களாகவே வரலாற்றில் காணப்படுகிறார்கள். அந்த வகையில் முஸ்லிம் மன்னர்களில் சிலரிடம் இஸ்லாமிய உணர்வை விட ‘நாடாளும் மன்னர்கள்’ என்ற உணர்வே மேலோங்கியிருந்ததை அவர்தம் செயற்பாடுகள் மூலம் தெளிவாக அறிய முடிகிறது. இதில் ஹிந்து, முஸ்லிம் என்பதெல்லாம் மிகவும் பின்னுக்குத் தள்ளப்பட்டு விடுகிறது என்பதைப் பல வரலாற்று நிகழ்வுகள் புலப்படுத்துகின்றன. இதற்கேற்பவே அவர்தம் படைத் தளபதிகளும் அமைந்தனர்.

கஜினியின் படைத் தளபதியாக விளங்கியவர் திலக் எனும் ஒரு ஹிந்துவே என்பதை நினைவிற்கொள்ள வேண்டும். திலக் கஜினியின் வெற்றியே குறியாகக் கொண்டிருந்தவர். கஜினி ஆட்சிப் பகுதியில் எங்கு என்ன குழப்பம் அல்லது அமைதியின்மை அல்லது புரட்சி ஏற்பட்டாலும் அங்கு சென்று வீர தீரத்துடன் போராடி அடக்கி வெற்றி பெரும் வல்லமை கொண்டவர். ஒரு சமயம் துருக்கிப் பகுதியில் முஸ்லிம்களிடையே மூண்டெழுந்த மாபெரும் சச்சரவை அடக்க கஜினி தளபதி திலக்கையே அனுப்பினார். முஸ்லிம் மக்களை மிகக் கொடுரமான முறையில் அடக்கினார் திலக். இதைப்பற்றி வரலாற்று வல்லுநரான பி.என். பாண்டே என்பவர் கூறுகிறார் :