பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

165


இரு வகைகளில் ‘ஜிஹாது’

திருக்குர்ஆன் அடிப்படையில் ஜிஹாது இருவகைப் பட்டதாக அமைந்துள்ளது. ஒன்று ‘ஜிஹாதுல் அஸ்கர்’ மற்றொன்று ‘ஜிஹாதுல் அக்பர்’.

ஒரு முஸ்லிம் தனக்கோ அல்லது தன்னைச் சார்ந்தவர்களுக்கோ ஆபத்து வருவதைப் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. உயிருக்கும் உடமைக்கும் ஆபத்து என்று வரும் போது அதை உடனடியாக எதிர்த்துப் போராடுவது அவன் செய்யும் ‘ஜிஹாதுல் அஸ்கர்’. தன்னைப் பாதுகாத்துக் கொள்வது வன்முறையும் அல்ல, தீவிரவாதமும் அல்ல! சுருக்கமாக இதை வெளிப்பகையை அல்லது பகைவர்களை எதிர்த்துப் போராடுதல் எனக் கூறலாம்.

மற்றொன்று ‘ஜிஹாதுல் அக்பர்’ ஆகும். இதற்கு ‘மாபெரும் போராட்டம்’ என்பது பொருளாகும்.

ஒவ்வொரு மனிதனிடத்திலும் கண், காது, மூக்கு, வாய், மெய் (உடம்பு) என்னும் ஐம்பொறிகள் உண்டு. இவற்றோடு தொடர்புடையவை ஐம்புலன்கள் ஆகும். இதை ஹிந்து மதத் தத்துவத்தில் ஐந்திரியங்கள் எனக் கூறுவா.

இத்தகைய ஐம்புலன்களையும் அடக்கி ஆளும் ஆற்றலைப் பெறுவதற்குப் பெரும் முயற்சி செய்து போராடி, ஆன்றவிந்தடங்கிய சான்றோர் ஆவதற்கு முயற்சிப்பதே மாபெரும் ஜிஹாது ஆகும். இதையே வள்ளுவரும்,

உரனெனும் தோட்டியான் ஒரைந்துங் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து

எனக் கூறினார்.

அதாவது அறிவு என்னும் அங்குசத்தால் ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கி ஆள்பவன் அறிவுக்கு வித்துப் போன்றவனாவான் என்பது அவர்தம் கருத்தாகும்.