பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

166


வேட்டை நாயும் வெறி நாயும்

இதே கருத்தை இன்னும் அழகான உவமான, உவமேயங்களுடன் சிந்தைகொள் மொழியில் எடுத்தியம்புகிறார் குணங்குடியார் அவர்கள்.

மாசற்ற மனமே தெளிவான சிந்தனைகளும் ஆன்மீக உணர்வுகளும் பூத்துக் குலுங்கும் தோட்டம். மனதைப் புனிதப்படுத்துபவன்தான் இறையருள் நாட்டத்தை எளிதாகப் பெறமுடியும். வேட்டை மேற் செல்பவன் வேட்டைப் பொருளை எளிதாகப் பெற வேட்டை நாய்களைத் துணைக்குக் கொண்டு செல்வான். அவன் கண்ணில் படும் வேட்டைப் பொருளை எசமானனின் குறிப்பிற்கேற்ப விரைந்து சென்று பிடித்து வந்து சேர்க்கும். வேட்டை நாய்களுக்குப் பதிலாக வெறி நாயைத் துணைக் கொண்டு வேட்டைக்குச் சென்றால், அது வேட்டைப் பொருளைப் பாய்ந்து சென்று பற்றி வராததோடு, தன்னைக் கொண்டு சென்ற வேட்டைக்காரன்மீதே பாய்ந்து கடித்துக் குதறி காயமேற்படுத்திவிடும் இதேபோன்று, இறையருள் பெற விரும்புபவன் அன்பு, அருள் ஆகிய இனிய பண்புகளைக் கைக் கொண்டால், அவற்றின் துணை கொண்டு இறையன்பை அருளை எளிதாகப் பெறலாம். மாறாக வேட்டை நாய் போன்று அவா, வெகுளி, ஆசை, அகங்காரம், இன்னாச் சொல் போன்றவற்றைக் கைக்கொண்டு இறையருள் பெற விழைந்தால், இறையன்பை - அருளைப் பெற முடியாமற் போவதோடு, இத்தீய குணங்களே அவன் அழிவுக்கும் காரணமாக அமைந்து விடும் என்பதை,

“வேட்டை பெரிதென்றே வெறி நாயைக் கைப்பிடித்து காட்டிற் புகலாமோ கண்ணே றகுமானே”

என்ற பாடல் மூலம் தெளிவுபடுத்துகிறார் குணங்குடி மஸ்தான்.