பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

167


பிறருக்குத் தீயன எண்ண அல்லது செய்ய உள்ளத்தளவில் உருக்கொண்டெழும் தீய உணர்வுகளை எதிர்த்துப் போராடி வெற்றி பெறுதலே சிறப்புமிகு செயலாகும். அதுவே ‘ஜிஹாதுல் அக்பர்’ ஆகும்.

இவ்விரண்டையும் இன்னும் சிறிது ஆழ ஆராய்ந்தால் இவற்றின் உன்னதச் சிறப்புகள் தெற்றன விளங்கும்.

சாந்தி - சமாதான மார்க்கமாக இறைவனால் அறிவிக்கப் பட்டுள்ள இஸ்லாத்தில் ஆக்கிரமிப்புக்கு இடமே இல்லை. ஒரு முஸ்லிம் முதலில் யார் மீதும் தாக்குதல் நடத்தவோ, போர் தொடங்கவோ, அன்றி எதிரியின் நிலத்தையோ பொருளையோ ஆக்கிரமிப்புச் செய்யவோ இஸ்லாம் அனுமதிக்கவில்லை. ஆனால், அதே சமயம் பிறரால் முஸ்லிம்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகும்போதோ அல்லது பிறர் படையெடுத்து வரும்போதோ அல்லது ஆக்கிரமிப்புச் செய்யும் போதோ தற்காப்புக்காக போரிடுவதையும் அதன்மூலம் வெற்றி பெறுவதையும் இஸ்லாம் தடை செய்யவில்லை.

இந்தியாவைப் பொறுத்தவரை ஆரம்ப காலத்தில் வாணிபம் செய்யும் பொருட்டு சிந்துவெளிப் பகுதிக்கு வந்து தங்கியிருந்த அரபு வணிகர்கள் அப்பகுதியை ஆண்ட ஹிந்து மன்னர்களாலும் மற்றவர்களாலும் பெரும் பாதிப்புக்கு ஆளானார்கள். பாதுகாப்பற்ற நிலையில் சிந்து வெளிப் பகுதியில் வணிகத் தொழில் புரிவது பெரும்பாடாக இருந்தது. இதையறிந்த அரபக ஆட்சித் தலைவர்கள் சிந்து வெளிப் பகுதி அரபு வணிகர்களுக்குப் பாதுகாப்பை ஏற்படுத்தும் வகையிலேயே அப்பகுதிக்கு முகம்மத் பின் காசிம் என்பவர் படையுடன் அனுப்பி வைக்கப்பட்டாரேயன்றி, அப்பகுதியை ஆக்கிரமிக்கும் நோக்கத்தோடு படை கொண்டு இந்திய மண்ணில் கால் பதிக்க வரவில்லை என்பதுதான் வரலாறு.