பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

175


“நீங்கள் நன்மை செய்பவர் என்று அண்டை வீட்டுக்காரர் கூறினால் நீங்கள் நல்லவர்” எனக் கருதப்படுவீர்கள். அல்லாமல் நீங்கள் தீமையே செய்பவர் என்று அண்டை வீட்டுக்காரர் கூறினால் நீங்கள் தீயவராகவே கருதப்படுவீர்” என்றெல்லாம் கூறுவதன் மூலம் ஒருவர் தன் அண்டை வீட்டாருடன் எவ்வாறெல்லாம் சிறப்பாக நடந்து கொள்ள வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்துகிறார்.

எது அண்டை வீடு?

ஒருவரது வீட்டையொட்டியோ அல்லது அருகாகவோ அமைந்துள்ள வீடா? அல்லது அவன் வீட்டிற்கு நான்கு அல்லது எட்டுத் திக்கிலும் அடுத்தடுத்து அமைந்துள்ள வீடுகளா?

இக்கேள்விக்கு விடை கூறவந்த இஸ்லாம் ‘ஒருவனது வீட்டின் அனைத்துத் திக்கிலும் அமைந்துள்ள நாற்பது வீடுகள் அண்டை வீடுகளாகக் கருதப்படும்’ எனத் தெளிவுபடக் கூறுகிறது.

தான் வாழும் வீட்டைச் சுற்றி மட்டுமல்ல, தன் பணியிடத்திலோ அல்லது பயணத்திலோ இருக்கும்போது தன் அருகிருப்போரும் அண்டையராகவே கருதப்படுவர். இவர்கள் அனைவருடனும் ஒரு முஸ்லிம் அன்புடனும் பரிவுடனும் நடந்துகொள்ள வேண்டும். அவர்கட்கு உதவியோ ஒத்துழைப்போ தேவைப்படும்போது, அவர்கள் கேட்காமலே, நாமாகவே முன் சென்று உதவ வேண்டும். அவர்கள் அந்நியராக இருந்தாலும், அந்நியச் சமயங்களைச் சார்ந்தவராக இருந்தாலும், அவர்தம் உணர்வுகளை, நம்பிக்கைகளை நாம் பெரிதும் மதித்து நடக்க வேண்டும். அவர்களது கொள்கைகளும் கோட்பாடுகளும் இஸ்லாமிய நெறி முறைகளுக்கு வேறுபட்டும் மாறுபட்டும் இருந்