பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

187


தலைப்பாகையை தூது அனுப்பிய பெருமானார்

பெருமானாருக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரிகளாக விளங்கிய மக்கா குறைஷிகளில் குறிப்பிடத்தக்க ஒருவர் ஸப்வான் இப்னு உமையா என்பவராவார்.

மக்கா வெற்றிக்குப் பின்னர் பலரும் இஸ்லாத்தை ஏற்றனர். ஆனால் இவர் இஸ்லாத்தை ஏற்காதிருந்தார். ஆரம்ப காலம் முதலே பெருமானாருக்கும் முஸ்லிம்களுக்கும் அளவிலா துன்பங்களையும் தொல்லைகளையும் கொடுத்து வந்ததோடு இரு சாராருக்குமிடையே நடைபெற்ற போர்களில் முஸ்லிம்களில் பலரைக் கொன்றவரும் கூட. இதனால் மக்கா வெற்றிக்குப் பின்னர் பெருமானாரும் பிற முஸ்லிம்களும் தன்னைக் கடுமையாகத் தண்டிக்கலாம் எனக் கருதி மக்காவைவிட்டு வெளியேறி குன்றுப் பகுதிகளில் ஒளிந்து வாழ்ந்தார்.

இதையறிந்த நாயகத் தோழர்களில் ஒருவரான ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்கள் பயத்தால் ஒடி ஒளிந்துள்ள ஸப்வானை மன்னிக்கும்படி வேண்ட, பெருமானாரும் பெருமனதோடு மன்னித்தார். மலைக் குன்றுகளில் உமர் (ரலி) ஸப்வானைத் தேடிக் கண்டுபிடித்து இதைக் கூறியபோது அவர் இதை நம்பவில்லை. காரணம், முஸ்லிம்களுக்குகெதிராகப் பெரும் கொடுமைக்காரனாகயிருந்த தன்னை அண்ணலார் மன்னிக்கவே மாட்டார் என்பது அவர் எண்ணமாக இருந்தது. இதையறிந்த பெருமானார் உமர் (ரலி) மூலம் தன் தலைப்பாகையை கொடுத்தனுப்பினார். தலைப் பாகையைக் கண்ட பின்னரும் ஸப்வான் நம்பிக்கை கொள்ளாது போகவே உமர் (ரலி) அவரை வற்புறுத்தி பெருமானாரிடம் அழைத்துச் சென்றார். ஸப்வானை நேரில் கண்ட பெருமானார், ஸப்வான் அதுவரை செய்த குற்றங்கள் அனைத்தையும் மன்னித்து விட்டதாகக் கூறினார்.