பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

191


மனிதர்களுக்கும் தூதருக்குமுள்ள கடமையைப் பற்றி, “அல்லாஹ்வுக்கு வழிப்பட்டு நடவுங்கள் (அவனுடைய) தூதருக்கும் வழிப்பட்டு நடவுங்கள்; நீங்கள் புறக்கணித்தால் (அது உங்களுக்குத்தான் நட்டம்) - ஏனென்றால் நம் தூதர் மீதுள்ள கடமையெல்லாம், அவர் (தன்னுடைய தூதைப்) பகிரங்கமாக எடுத்துரைப்பதுதான்”.

(திருக்குர்ஆன் 64; 12)

இந்த இறைமொழிகளின் அடிப்படையில் ஆராய்கையில் பெருமானார் காலத்திலும் சரி, பின்னரும் சரி இஸ்லாத்தை ஏற்பதோ அல்லது ஏற்காதிருப்பதோ மக்களே சுயேட்சையாக முடிவெடுக்க வேண்டுமே தவிர, எவ்வித நிர்ப்பந்தத்தையும் ஏற்படுத்துவது இறைக் கட்டளைக்கு நேர்மாறான செயலாகும். இதை நன்கு உணர்ந்திருந்த முஸ்லிம்கள் தாங்கள் நாடாளும் பெருமன்னர்களாக அரசோச்சியபோதுகூட, மாற்றுச் சமயத்தவர்மீது எவ்வித நிர்ப்பந்தத்தையும் திணிக்காததோடு தாங்கள் விரும்பும் மதத்தை, விரும்பிய முறையில் பேணி வழிபட, மக்களுக்கு பரிபூரண உரிமை உண்டு என்பதை நிலைநிறுத்தி வந்தனர் என்பதுதான் வரலாறு.

ஹுதைபியா ஒப்பந்தமும்
பிற சமயத்தாரோடு சமாதானமும்

சாந்தியையும் சமாதானத்தையும் உயிர்மூச்சாகக் கொண்ட இஸ்லாம் வெவ்வேறு சமயத்தைச் சேர்ந்தவர்கள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பதன்மூலம் சமரச உணர்வு பொங்க வாழமுடியும் என்பதை உலகுக்குக் காட்டும் உன்னதச் செயலாக ‘ஹுதைபியா ஒப்பந்த’ நிகழ்ச்சி வரலாற்றில் அரிய உதாரணமாக இடம் பெற்றுள்ளது.