பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

192


ஹிஜ்ரி ஆறாம் ஆண்டு தொடங்கியபோது, மதீனாவில் வாழ்ந்த 1400 முஸ்லிம்கள் நபிகள் நாயகம் (சல்) அவர்கள் தலைமையில் மக்காவிலுள்ள காபாவை நோக்கி ஹஜ் பயணம் மேற்கொண்டார்கள்.

ஆயுதம் ஏதுமின்றி நிராயுதபாணிகளாக இஹ்ராம் வெள்ளுடை தரித்துப் புறப்பட்டவர்கள் மக்காவுக்கு அருகில் தங்கியிருந்தார்கள். இவர்கள் மக்கா வருவதையறிந்த சிலை வணக்கச் சமயத்தவரான மக்கா குறைஷிகள் காலீத் இப்னு வலீத் எனும் முரட்டு வீரரின் தலைமையில் பெரும் படையை அனுப்பினர். இதை ஞான உணர்வால் உய்த்துணர்ந்த பெருமானார் போரைத் தவிர்க்கும் பொருட்டு தன் தோழர்களோடு வேறு வழியாகச் சென்று மக்கா நகருக்கு அருகேயுள்ள ஹுதைபியா எனுமிடத்தில் தங்கியிருந்தனர். இவர்களை எக்காரணம் கொண்டும் மக்கா நகருக்குள் அனுமதிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்த மக்கா குறைஷிகள் பலமான பாதுகாப்பு வளையத்தை நகரைச் சுற்றி அமைத்தனர். அத்துடன் நிலைமையை, வருகையின் நோக்கத்தை அறிந்துவர சுகைல் என்பவரை அண்ணலாரிடம் அனுப்பி வைத்தனர். சுகைல் இஸ்லாத்தில் இணையாவிட்டாலும் பெருமானாரிடம் பெருமதிப்புக் கொண்டிருந்தவர். எனவே, நபியோடு பேச்சு நடத்த அனுப்பியதற்கிணங்க அவர் அண்ணலாரை அணுகியபோது பெருமானார், தாங்கள் போரிட வரவில்லை என்றும் மக்காவிலுள்ள காபா இறையில்லம் சென்று ‘ஹஜ்’ கடமையாற்றவே வந்திருப்பதாகவும், தேவை என்று கருதினால் இதற்காக அமைதி ஒப்பந்தம் செய்து கொள்ளவும் தான் தயாராயிருப்பதையும் ஹஜ் கடமையை நிறைவேற்ற உறுதியாயிருப்பதையும் பெருமானார் சுகைல் மூலம் சொல்லியனுப்பினார்.