பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

198

சரியான சமாதானம் கூறும்படி குறைஷிகளுக்குத் தாக்கீது அனுப்பினார். ஆனால் குறைஷிகள் இதற்குத் தக்க சமாதானம் ஏதும் கூற முன்வரவில்லை. இதனால் மன வருத்தம் அடைந்த பெருமானார். தங்கள் நண்பர்களாகவுள்ள சிலைவணக்கச் சமயத்தவர்களான பனிகுளாஆ மக்களுக்கு பாதுகாப்பும் உதவியும் செய்ய முன்வந்தார். இனியும் அவர்கட்கு குறைஷிகளால் தீங்கு ஏற்படா வண்ணம் தடுக்கும் முகத்தான் மக்கா குறைஷிகளின் மீது படை யெடுத்தார் அண்ணலார். மக்காமீது நடத்திய படையெடுப்பு அல்ல. அஃது சிலை வணக்கப் பிரிவினரான பனிகுளாஆ வகுப்பினரின் நிரந்தரப் பாதுகாப்புக்காக மேற்கொள்ளப்பட்ட படையெடுப்பு என்றே கூறலாம். இவ்வாறு அண்ணலார் அவர்கள் முஸ்லிம்கள் நலம்மீது கொண்டிருந்த அதே அளவு அக்கறையும் கவலையும் முஸ்லிமல்லாத மாற்றுச் சமயத்தவர் நலனிலும் கொண்டிருந்தார் என்பதே உண்மை.

சமநீதி வழங்குவதில் இஸ்லாத்தின் முன்மாதிரி

சமநீதி வழங்குவதில் ஆள்பவர்-ஆளப்பவோர், இஸ்லாமியர்-பிற சமயத்தினர் என்ற வேறுபாட்டுணர்வுக் கெல்லாம் அப்பாற்பட்ட நிலையில் அனைவரையும் சமமாகப் பாவித்து நீதி வழங்குவதில் இஸ்லாம் புதிய நடைமுறையை சமநீதிச் சாதனையை முதன் முதலாக உலகில் நிலை நாட்டியது எனலாம்.

நான்காவது கலீஃபாவாக அலி(ரலி) ஆட்சி நடத்தி வந்த சமயம், கலீஃபாவின் இரும்புக் கவசம் காணாமற் போய் விட்டது. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. பிறகு தான் தெரிய வந்தது அந்தக் கவசம் கூஃபா நகரைச் சேர்ந்த ஒரு கிருஸ்தவரிடம் இருப்பது.