பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

201

தீர்ப்புக் கூறினார். நாடாளும் மன்னரின் மனைவி, ஆட்சி அதிகாரத்தில் பெரும்பங்கு வகித்து வந்த பட்டத்து ராணி சிறையில் அடைக்கப்பட்டார்.

மன்னர் ஜஹாங்கீர் மரண தண்டனையிலிருந்து அரசியை விடுவிக்க இஸ்லாமியச் சட்டத்தில் ஏதேனும் வழி வகைகள் உண்டா என இஸ்லாமியச் சட்ட வல்லுநர்களைக் கேட்டுக் கொண்டார். ஆழ்ந்த ஆய்வுக்குப்பின் சட்டத்தில் ஒரு சலுகை இருப்பதைக் கண்டறிந்தார்கள். கொலை செய்யப்பட்டவரின் வாரிசுகள், யாருடைய வற்புறுத்தலோ கட்டாயமோ இல்லாது தானாக முன்வந்து மரணத்துக்கான ஈட்டுத் தொகை கேட்டுப் பெற்றுக் கொண்டால், குற்றவாளியை மன்னித்து விடுதலை செய்து விட முடியும் என்பதே அது. இதையறிந்த மன்னர் ஜஹாங்கீர், இறந்தவரின் வாரிசுகளின் ஒப்புதல் பெற எக்காரணம் கொண்டும் தன் செல்வாக்கையோ அதிகாரத்தையோ கடுகளவும் பயன்படுத்தக் கூடாது எனக் கடுமையாகக் கட்டளையிட்டார்.

பிறகு, குடிமக்களே ஹிந்து சலவைத் தொழிலாளியின் மனைவியிடம் சென்று ஈட்டுத் தொகை பெற்று குற்றவாளியை மன்னிக்கும் சட்ட முறையை எடுத்துக்கூறி வேண்டினர். அவளும் மனமிரங்கி ஈட்டுத் தொகையைப் பெற்றுக் கொண்டு கொலைக் குற்றவாளியை மன்னிப்பதாகக் கூறினாள். இதனால் நூர்ஜஹான் மரண தண்டனையிலிருந்து விடுதலை பெற முடிந்தது.

ஒரு சாதாரண சலவைத் தொழிலாளியாக, மாற்றுச் சமயத்தவராக இருந்தாலும் சட்டத்தின் முன் அனைவரும் சமமே என்ற நிலையில் சமநீதி வழங்க இஸ்லாமியச் சட்டமோ, அதன் வழி அரசு நடத்திய முஸ்லிம் மன்னர்களோ கிஞ்சிற்றும் தவறவில்லை என்பதற்கு