பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

206

டிருந்தார். மற்றபடி கிருஸ்தவ மதத் தொடர்பான விஷயங்களிலும் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட விஷயங்களிலும் முழு அதிகாரம் கிருஸ்தவ சபைகளுக்கே உண்டு என்பது சட்டப்படி உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. முஸ்லிம் அதிகாரிகள் மட்டுமல்ல, நாட்டின் தலைமைப் பொறுப்பில் இருந்த சுல்தானே தலையிடுவதில்லை. இன்னும் சொல்லப் போனால் எந்த ஆளுநராவது இதற்கு மாறுபாடாக நடக்க முயன்றால் அந்த விஷயத்தைச் சுல்தான் பார்வைக்குக் கொண்டு செல்லவும், இன்னலுக்கு ஆளான கிருஸ்தவர்களின் துயர் துடைக்கவும் தலைமைப் பாதிரியாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது.

இவ்வாறு மாற்றுச் சமயமான கிருஸ்தவர்கள் எல்லா விதமான உரிமைகளையும் சலுகைகளை, அதிகாரங்களையும் பெற்று முஸ்லிம்களுக்கு இணையான நிலையில் எவ்விதக் குறையும் இல்லாது வாழ்ந்து வந்தனர் என்ற வரலாற்றுச் செய்திகள் இஸ்லாத்தின் பிற சமய நல்லிணக்கப் போக்கையும் பிற சமயக் கண்ணோட்டத்தையும் அதற்கு வழிகாட்டியாயமைந்த பெருமானார் வாழ்வையும் வாக்கையும் நமக்கு இன்றும் உணர்த்திக் கொண்டுள்ளன.

மதிப்பதும் ஏற்பதும் ஒன்றா?

ஒவ்வொரு முஸ்லிமும் இறுதித் தூதருக்கும் இறுதி வேதத்திற்கும் முன்னதாக அனுப்பப்பட்ட இறைதூதர்களையும் அவர்கட்கு வழங்கப்பட்ட இறை வேதங்களையும் கோட்பாட்டளவில் ஒப்புக் கொள்கிறான். அதனால் அவற்றை மதிப்பதும் அவனுக்குரிய கடப்பாடாகிறது. ஆயினும், அவற்றை அவன் ஏற்றுச் செயல்படுத்த முனைவதில்லை. இறுதித் தூதரையும் இறுதி வேதத்தையும் முழுமையாக ஏற்று, வாழ்வில் முழுமையாகச் செயல்படுத்தி முழுமை முஸ்லிமாக ஆக முனைகிறான். இதன் மூலம்