பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

207

துணை இல்லாதவன்; அவனை யாரும் பெறவும் இல்லை; அவன் யாரையும் பெற்றெடுக்கவும் இல்லை என அறுதியிட்டு உறுதியாகக் கூறுகிறது. மற்றொரு மதம் ‘இறைவன் ஒருவனல்ல; அவர்கள் பலர். அவர்கட்கு துணையும் உண்டு, பிள்ளைகளும் குடும்பமும் உறவு முறைகளும் உண்டு’ என்கிறது.

ஒரு சமயம் மனிதனுக்கு மறுபிறவி என்பதே இல்லை. இறந்த மனிதனின் ஆன்மா இறுதித் தீர்ப்பு நாள்வரை காத்திருக்க வேண்டும். அவ்வாத்மா இவ்வுலக வாழ்வில் செயல்பட்டதற்கேற்ப நரக வேதனையோ அல்லது சொர்க்கப் பெருவாழ்வோ பெறமுடியும் என்கிறது.

ஆனால், வேறொரு சமயமோ மனிதனுக்குப் பல பிறவிகள் உண்டு. அவன் செயற்பாடுகளுக்கேற்ப அவன் பிறவி எடுத்துக்கொண்டே இருப்பான் என்று கூறுகிறது. மனிதன் மட்டுமல்ல இறைவனும் மனிதர்களில் ஆணாகவும் பெண்ணாகவும், ஏன் சில சமயங்களில் விலங்கு வடிவாகவும் கூட (நரசிம்மவதாரம்) அவதாரம் எடுப்பதுண்டு எனக் கூறுகிறது. இவைகளையெல்லாம் எவ்வாறு ஒரு நிலையில் ஒரே படித்தரமாக வைத்து ஏற்க முடியும்? அப்படி ஏற்பது எவ்வாறு அறிவுக்குப் பொருத்தமுடையதாக ஆகும்? கறுப்பையும் வெண்மையையும் ஒரே மாதிரியான வண்ணமாக ஏற்பது எங்ங்னம்? என்றெல்லாம் எழுப்பப்படும் வினாக்களை எளிதாக ஒதுக்கிவிட முடியாது. அவை ஆழ்ந்த ஆய்வுக்குரியவைகளே ஆகும்.

உலக மதங்கள் அனைத்துமே ஒரே மூலாதார அடிப்படையுடையனவேயாகும் என்றாலும் காலப் போக்கில் அவைகளே வளர்த்துக் கொண்ட கடவுட் கொள்கைகளும் இறை வழிப்பாட்டுச் சமயச் சடங்கு, சம்பிரதாயக் கோட்பாடுகளும் வெவ்வேறு விதமாய், எதிரும் புதிருமாக