பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

208

மதிப்பது அல்லது ஒப்புக் கொள்வது என்பது வேறு; ஏற்பது அல்லது நடைமுறைப்படுத்துவது என்பது வேறு எனத் தெளிவாகிறது.

எம்மதமும் சம்மதம் எனும்
கருத்து ஏற்புடையதுதானா?

அண்மைக் காலமாக ஒரு கவர்ச்சிகரமான முழக்கம் நம்மிடையே முழங்கப்பட்டு வருகிறது. ‘எம்மதமும் சம்மதம்’ எனும் முழக்கமே அது. அனைத்துச் சமயங்களும் அவை புகட்டும் கொள்கை, கோட்பாடுகளும் சமமானவையே. அவை சத்தியத்தின்பாற்பட்டவையே. இறையருளைப் பெறவும் மேலுலகப் பெருவாழ்வு பெறவும் இவ்வுலக வாழ்வு வெற்றி காணவும் எந்த மதமாயினும் வேறுபாடின்றி அவற்றை ஏற்றுப் பின்பற்றலாம். குறிப்பிட்ட ஒரு மதத்தின் கொள்கை கோட்பாடுகளை மட்டும் ஏற்ப தென்பது ஏற்புடையதன்று; அஃது பிற்போக்குத் தனமானதும் கூட. அவ்வாறு கூறுவதும் செயல்படுவதும் சமய சகிப்புணர்வின்மையையே வெளிப்படுத்தும் ஒன்றா கும் என்ற உணர்வை ஊட்டுகின்ற முறையில் ‘எம்மதமும் சம்மதமே’ எனக்கூறித் தங்கள் பரந்த உள்ளத்தைப் பறைசாற்ற பலரும் முற்படுகின்றனர்.

இத்தகைய முழக்கங்கள் கேட்பதற்கு மிகவும் இதமான தாகவும் மனதுக்கு ஒருவகை மகிழ்ச்சியூட்டுவதாகவும் இருப்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால், ஆழ்ந்து நோக்கின் இஃது ஏற்புடைய முழக்கம்தானா என்ற எண்ணம் எழுந்து, நம்மை அறிவுப்பூர்வமாகச் சிந்திக்கத் தூண்டுகிறது.

எதிரெதிர் திசைகள் எவ்வாறு
ஒரே திசையாக முடியும்?

ஒரு மார்க்கம் ‘இறைவன் ஒருவனே. அவன் இணை.