பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

222

வெறுப்புணர்வுக்குமே வழியாயமைகிறது. தனிமனித வாழ்விலும் சமுதாய வாழ்விலும் தாங்கள் சார்ந்த சமயத்திற்குரிய இடம் எது என்பதில் திட்டவட்டமான உணர்வும் சிந்தனையும் இருப்பதில்லை.

சமய அறிவில்லா சமயப் போலிகள்

உண்மையான சமய அறிவும் உணர்வும் உள்ளவர்களால் சமுதாயத்தில் எந்த விதப் பிரச்சினையும் ஏற்படுவதில்லை. இஸ்லாம் உட்பட எந்த ஒரு சமயமும் இத்தகு போக்கை அனுமதிப்பதும் இல்லை. சமய அறிவு இல்லாத சமயப் போலிகளாலேயே சமுதாய வீதியில் குழப்பமேற்படுகிறது. ஒரு ஹிந்துவுக்கு மகனாகப் பிறந்து விட்ட காரணத்தாலேயே இந்துவாக இருப்பவர்களாலும் முஸ்லிமுக்கு மகனாகப் பிறந்துவிட்டதாலேயே முஸ்லிம் என நடமாடி வருபவர்களாலும் ஒரு கிருஸ்தவனுக்கு மகனாகப் பிறந்துவிட்டதால் மட்டுமே கிருஸ்தவனாகக் கருதிக் கொள்பவர்களாலுமே எல்லா சமயச் சண்டைகளும் சச்சரவுகளும் சமுதாயத்தில் ஏற்படுகின்றன. சமயச் சார்புள்ளவர்கட்கு மகனாக பிறந்த இவர்கள் தங்கள் சமய அறிவைப் போதிய அளவு பெறாது, மதப் பெயர் தாங்கிகளாக மட்டும் இருப்பவர்கள். எனவே, உண்மையான சமய அறிவு உள்ளவர்கட்கும் சமய அறிவில்லாது, வெறும் சமயப் பெயர் தாங்கிகளாக உலவுபவர்கட்குமிடையே மாபெரும் இடைவெளியுள்ளது. இந்த இடைவெளியைப் பயன்படுத்தும் சமூக விரோதச் சக்திகள் சமயப் பெயர் தாங்கிகளிடையே உருவாக்கும் சமயவெறி பல்வேறு தீங்குகளுக்குக் காரணமாயமைகிறது.

தனிமனிதனும் சமுதாய மனிதனும்

ஒவ்வொரு மனிதனும் இருவேறு நிலைகளில் இயங்கக் கூடியவனாக இருக்கிறான். ஒன்று தனிமனிதன், மற்றொன்று சமுதாய மனிதன்.