பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

223


ஒருவன் தன் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கேற்ப, தான் விரும்பியவாறெல்லாம், யாருடைய தலையீடுமின்றி வாழும் தனியுரிமை தனிமனித வாழ்வுக்குண்டு. இதற்கு எல்லா வகையிலும் ஏற்றநிலைக்களனாக அமைவது இல்லமாகும். வீட்டிலிருக்கும்போதோ அல்லது தன்னுடைய தனியுடைமையான இடங்களில் அன்னிய மனிதர்களின் தலையீடே இல்லாமல் வாழக்கூடிய சூழ் நிலைகளில் அவன் எப்படி வேண்டுமானாலும் வாழ முழு உரிமை உண்டு. விரும்பியதை உண்ண, உடுக்க, சமய வழிபாடுகளை, சடங்குகளை நிறைவேற்ற பரிபூரண உரிமை உண்டு.

ஆனால், அவன் தன் வீட்டை விட்டோ அல்லது தனியுரிமை கொண்ட வளாகத்தை விட்டோ வெளியேறி வீதியில் காலடி எடுத்து வைத்தவுடன் அவனது தனிமனித உரிமைகள் கட்டுப்படுத்தப்பட்டு விடுகின்றன. அவன் சமுதாய மனிதனாகி விடுகின்றான். பல்வேறு வகையான மனிதர்கள் உலவும் இடம் சமுதாய வீதி. பலவகை மனிதர்கள் மட்டுமல்லாது பல்வேறு வகையான சமய உணர்வுகளும் சிந்தனைகளும் கருத்துகளும் உலவும் இடமாகவும் சமுதாய வீதி அமைகிறது. அதற்கேற்ப தனிமனித உரிமைகள் கட்டுப்பட்ட நிலையில் அமைய வேண்டியதாகிறது. சுருங்கச் சொன்னால், சாலையில் என் விருப்பப் படி கைத்தடியைச் சுழற்றிச் செல்ல உரிமை உண்டெனினும், பிறர் கண்ணில்படாதவாறு சுழற்றிச் செல்ல மட்டுமே உரிமை உண்டு.

தனிமனிதனுக்கு எவ்வாறு உரிமைகளும் கடமைகளும் உண்டோ அதேபோன்று சமுதாய வீதியில் உலவும் ஒவ்வொரு சமுதாய மனிதனுக்கும் நிறைவேற்ற வேண்டிய கட்டுப்பாடுகள் பல உண்டு. இதைப்பற்றிய தெளிவான