பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

224

உணர்வும் சிந்தனையும் ஒவ்வொருவருக்கும் இல்லாததாலேயே சமுதாயத்தில் அமைதியின்மையும் குழப்பங்களும் சண்டை, சச்சரவுகளும் ஏற்பட ஏதுவாகின்றன. அதிலும், குறிப்பாக தனிமனிதத் தொடர்புள்ள சமயங்களை சமுதாய வீதிக்கு இழுத்து வந்து பிறர் மீதும் திணிக்க முயலும்போதுதான் எல்லா தகராறுகளுமே முளைவிட்டு, கிளைத்துப் படர்கின்றன.

எந்தச் சமயமும் தனி மனிதத் தொடர்புடைய ஒன்றாகத் தான் இருக்கிறது. சமய உணர்வுகளும் தத்துவங்களும் கருத்துகளும் உள்ளம் தொடர்பானவைகளாகும். ஒவ்வொருவரும் எந்த அளவுக்குத் தங்கள் உள்ளத்தில் இறை உணர்வையும் இறைச் சிந்தனையையும் கருத்துகளையும் தேக்கி, செயல் வடிவில் தன் வாழ்வில் நிறைவேற்றி வெற்றி பெறுகிறாரோ அந்த அளவுக்கு அவர் இறைவனின் பேரன்பையும் அதன் மூலம் பேரருளையும் பெற்றுய்ய முடியும் என்பது ஒவ்வொரு சமயமும் உணர்த்தி வருகின்ற உண்மை. இதற்குரிய இடங்களாக ஒவ்வொருவரின் வீடும் இறையில்லமும் சமயச் சார்பான வளாகங்களும் அமைகின்றன. சமயச் சார்பான நடவடிக்கைகளுக்கு உரிய இடம் சமுதாய வீதி அல்ல.

சமுதாய வீதியில் நடமாடும் ஒவ்வொருவரும் சமுதாய மனிதனுக்குரிய உரிமைகளை அனுபவிக்கவும் கடமை களை ஆற்றவும் மட்டுமே முயல வேண்டும். ஒவ்வொரு வரும் தங்கள் சமயச் சார்புகளை திணிக்காமலும் மற்றவர்களின் சமய உணர்வுகளை மதித்தும் நடக்க வேண்டிய இன்றியமையாக் கட்டுப்பாடு ஒவ்வொரு சமுதாய மனிதனுக்கும் உண்டு. உண்மையான சமய உணர்வாளர்களும் சிந்தனையாளர்களும் இத்தகைய போக்கையுடையவர்களாகவே இருக்கிறார்கள். இஸ்லாமும் இதையே வலியுறுத்துகின்றது.