பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

27

என்ற உணர்வை மக்கள் அழுத்தமாகப் பெற்றிருந்ததேயாகும். இந்த உண்மையை ஞானிகளும் இஸ்லாமிய மார்க்க ஞானச் செல்வர்களும் திருமறை வழியும் பெருமானார் பெருவாழ்வு வாயிலாகவும் உணர்ந்திருந்ததோடு வலுவாக மக்களிடையே உணர்த்தி வந்ததுமாகும்.

“இஸ்லாம் எந்தச் சமயத்திற்கும் எதிரானது அன்று” என்பது நபிகள் நாயகம் (சல்) அவர்களின் புகழ் பெற்ற பொன்மொழியாகும்.

இஸ்லாம் பிற சமயக் கருத்துகளை, கடவுளர்களை, சமயத் தலைவர்களை, சமயச் சடங்குகளைக் குறை கூறிப் பேசுவதை, கருத்துரைப்பதைக் கடுமையாகத் தடுக்கிறது.

“உங்களுக்கு உங்கள் மார்க்கம்; அவர்களுக்கு அவர்கள் மார்க்கம்” (திருக்குர்ஆன் 109-6) எனவும்.

“அல்லாஹ்வை விடுத்து அவர்கள் எவற்றை வணங்குகிறார்களோ அவற்றைப் பற்றி நீங்கள் தீங்கு பேசாதீர்கள்” (திருக்குர்ஆன் 6:108)

எனவும் கூறப்பட்டுள்ள திருமறைக் கருத்துகள் இஸ்லாத்தின் பிற சமயச் சகிப்புணர்வின் எல்லை எதுவெனக் காட்டுகிறது.

‘பொய்யுடை யொருவன் சொல்வன்மையினால் மெய் போலுமே! மெய் போலுமே’ என்ற முதுமொழியொன்று தமிழில் உண்டு. அதற்கொப்ப பிற சமயங்கள் பற்றி இஸ்லாம் கொண்டுள்ள சமயப் பொறை உணர்வுக்கு மாறாக ‘இஸ்லாமியர்கள் தங்கள் ஆதிக்க அதிகார பலத்தைக் கொண்டு வாளால் பரப்பினர்’ என்றெல்லாம் இந்திய மக்களை சமய அடிப்படையில் பிரித்து வைக்கும் போக்கை மேற்கொண்டிருந்த வெள்ளையர்களும் பிறரும் தங்கள் அதிகார, பிரச்சாரப் பலத்தையும் வசதிகளையும் கொண்டு