பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

31


இதிலிருந்து முந்தைய நபிமார்களும் அவர்கட்கு வழங்கப்பட்ட இறைவேதங்களும் அவ்வச் சமயத்தவர்கட்கு மட்டும் உரிமையுடையதன்று. ஒவ்வொரு முஸ்லிமுக்கும் உரியதாகின்றது. தோரா வேதம் யூதர்கள் வேதம் மட்டுமன்று; இன்ஜீல் வேதம் கிருஸ்தவர்கட்கு மட்டுமன்று; அவ்வாறே ஏப்ரஹாம் எனும் இபுறாஹீம் (அலை) அவர்கட்கும். ஏன்-ஆதி மனிதரும் முதல் நபியுமான ஆதாம் (அலை) அவர்கட்கும் வழங்கப்பட்ட மூலவேதமும் ஒவ்வொரு முஸ்லிமுடைய வேதமாகும் என்பது தான் இஸ்லாமியக் கோட்பாடு.

இவ்வாறு விண்ணளாவும் அளவுக்குப் பரந்த சமயக் கண்ணோட்டத்தை இஸ்லாமிய மார்க்கம் உணர்த்திக் கொண்டுள்ளது. இதைச் சமய சகிப்புணர்வின் உச்சகட்டம் என்றே கூறவேண்டும்.

உலகெலாம் நபிமார்கள்

இன்றைய உலகில் மக்கள் பேணும் மதங்கள் பல உள்ளன. இவற்றுள் சில காலத்தால் முற்பட்டவை. இன்னும் சில காலத்தால் பிந்தியவை. இஸ்லாம் நிலை பெறுவதற்கு முன் உலகப் பெரும் சமயங்களாக யூத, கிறிஸ்தவ, இந்து, சமண, பெளத்த சமயங்கள் உலகில் நிலவி வந்தன. இன்னும் சொராஸ்டிரியம் போன்ற சிறு சிறு சமயங்களும் உலகில் ஆங்காங்கே இயங்கி வந்தன எனலாம்.

இச் சமயங்களின் தோற்றத்திற்கு மூலவர்களாக விளங்கியவர்கள் அந்தந்த பகுதிக்குள் அடங்கியவர்களாகவே இருந்தார்கள். யூத, கிருஸ்தவ சமயாச்சாரியர்கள் அனைவருடைய தோற்ற வரலாறுகளும் பாலஸ்தீனத்துக்குள் அடங்கியதாகவே உள்ளது. அந்நாட்டிற்கு வெளியே அவர்கள் யாரும் தோன்றியதாக வரலாறு இல்லை.