பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

அதேபோன்று இந்து மத, சமண, பெளத்த சமயங்களைத் தோற்றுவித்த இறை அவதாரங்கள், ரிஷிகள் எல்லோருமே இந்திய மண்ணோடு சரி. பாரத மண்ணிற்கு வெளியே அவர்களில் யாருமே தோன்றியதாக எந்த வரலாறும் இல்லை. இந்தியாவுக்கு வெளியே, கிழக்காசிய நாடுகளில் பெருமளவில் பரவி, பெரும் புகழ் பெற்றுத் திகழ்ந்த கெளதம புத்தர் உட்படச் சமயச்சாரியர்கள் அனைவருமே இந்தியாவுக்குள் மட்டுமே தோற்றம் பெற்றுள்ளார்கள் என்பதுதான் வரலாறு.

ஆனால், இஸ்லாமிய மரபுப்படி, இறைவனால் படைக்கப்பட்ட மனித சமுதாயத்துக்கு இறைவனின் நேர் வழி உணர்த்தி வழிகாட்டிட, இவர்கள் உட்பட அனுப்பப் பட்ட ஒரு இலட்சத்து இருபத்திநான்காயிரம் நபிமார்கள் உலகெங்கும் தோற்றம் பெற்றிருக்கிறார்கள். இவர்கள் எல்லா நாட்டிலும் எல்லா இனத்திலும், எல்லா மொழிகளிலும் பிறந்துள்ளார்கள். இவர்களில் சிலர் ஒரு நாட்டு மக்களை இறை நெறியில் வழி நடத்தியிருக்கிறார்கள். வேறு சில நபிமார்கள் குறிப்பிட்ட இன மக்களை நல்வழியில் செலுத்தியிருக்கிறார்கள். இன்னும் சிலர் குறிப்பிட்ட மொழி பேசும் மக்களுக்கு இறை நெறியைப் புகட்டி வழிகாட்டியிருக்கிறார்கள். இவ்வாறு இறை தூதர்கள் தோன்றாத நாடோ, இனமோ, மொழியோ இருந்ததாக வரலாறு இல்லை எனலாம். இதையே திருக்குர்ஆன்,

“அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் (நம்முடைய) தூதர் வராத எந்த வருப்பாரும் பூமியில் இருக்கவில்லை” (திருக்குர் ஆன் 35-24)

எனத் திருமறை தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.