பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

நமக்குப் போதிக்க வந்தவர்களாதலால் நம்மைப் போன்றே அவர்களும் மனிதர்களாக இருக்க வேண்டுவது அவசியமாகும். அப்போதுதான் அவர்கள் மனிதப் பண்பையும் மனப் போக்கையும் உணர்ந்து, மனிதர்களோடு பழகி, இறைச் செய்தியைப் போதிக்க முடியும். இவ்வாறு இறைச் செய்தியை மக்களுக்கு உணர்த்தி அவர்களை இறை வழியில் செலுத்த மனு (ஆதாம்) முதல் அனுப்பப்பட்ட இறை தூதர்கள்-தீர்க்கதரிசிகளின் மொத்த எண்ணிக்கை 313 என ஹிந்து சமயக் கோட்பாடுகள் தெரிவிக்கின்றன. இஸ்லாம் மார்க்கம் முதல் நபி ஆதாம் (அலை) தொடங்கி இறுதி நபி (சல்) அவர்கள் வரை ஒரு இலட்சத்து இருபத்து நான்காயிரம் இறை தூதர்கள் மனித குலத்துக்கு வழிகாட்ட இறைவனால் அனுப்பப்பட்டுள்ளதாக இஸ்லாமியக் கோட்பாடு கூறுகிறது.

‘ஹிந்து சமய மரபுப்படி இறைவனால் அனுப்பப்பட்ட 313 இறை தூதர்களில் 20வது தீர்க்கதரிசி ‘பிரஹ்மா’ ஆவார். இவரே ‘ஆப்ரஹாம்’ என கிருஸ்தவ பைபிள் கூறுகிறது. ‘இப்றாஹீம் நபி’ எனத் திருக்குர் ஆன் குறிப்பிடுகிறது. இவரே இறைவனின் தீர்க்கதரிசி ‘பிரஹ்மா’ என ‘இந்தியா பிரிக்கப்பட்டால்’ என்ற நூலில் (பக். 36) பாபு ராஜேந்திரப் பிரசாத் குறிப்பிட்டுள்ளார்.

இதிலிருந்து ஹிந்து சமயம் உட்பட அனைத்துச் சமய தீர்க்கதரிசிகளும் ஒரே மூலக் கொள்கையைப் பரப்ப வந்தவர்களே என்பது தெளிவு.

முதல் நபிக்குக் கூறியதே இறுதி நபிக்கும்

இதில் நாம் கவனிக்கத்தக்க சிறப்பம்சம் ஆதி மனிதரும் ஆதி நபியுமாகிய ஆதாம் (அலை) அவர்கட்கு எந்தச் செய்தியை இறைவன் வேத மொழியாக வழங்கினானோ அதே இறைச் செய்தியைத்தான் இறுதி நபியாகிய