பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

41

வில் இறைநெறியைப் போதிப்பவர்களாகவே இருந்தனர். ஆன்மீக வழியில் உள்ளத்தை வளப்படுத்தவும் வலுப்படுத்தவும் அவர்கள் தங்கள் சொல்லாற்றலைப் பயன்படுத்தினார்கள். அவர்களின் ஆற்றல்மிகு சொற்பொழிவுகள் மக்களைச் சிந்திக்கத் தூண்டின. ஆயினும், அவ்விறைத் தூதர்கள் தாங்கள் போதித்தவாறே வாழ்ந்து காட்டும் தகைமையைக் கொண்டிருக்கவில்லை.

காரணம், அத் தீர்க்கதரிசிகள் வாழ்க்கையின் அனைத்து வகைகளிலும் முறைகளிலும் வாழும் வாய்ப்பைப் பெற்றவர்கள் அல்லர். ஓரிரு வகையான வாழ்க்கை முறைகளைப் பெற்றவர்களாகவே வாழ்ந்தவர்களாவர். சான்றாக, ஏப்ரஹாம் என அழைக்கப்படும் இபுறாஹீம் (அலை) அவர்கள் அரசு நடத்தியவராகவோ போர்ப்படைத் தளபதியாகவோ வாழ்ந்தவர் அல்லர். அதே போன்று இயேசுநாதர் என்று அழைக்கப்படும் ஈஸா (அலை) அவர்கள் குடும்பத் தலைவராகவோ ஆட்சியாளராகவோ வாழும் வாய்ப்புப் பெற்றவரல்லர். எனவே, அவர்கள் ஆன்மீக வாழ்வின் அடிப்படையிலான வாழ்க்கை நெறி முறைகளை போதித்தவர்களாக விளங்கினர்.

ஆனால், இறுதித் தூதரான முஹம்மது நபி (சல்) அவர்கள் வெறும் போதனாசிரியராக மட்டுமல்லாது மனித வாழ்வின் அழகிய முன்மாதிரியாகவும் வாழ்ந்துகாட்ட இறைவனால் அனுப்பப்பட்டவராவார். மனித வாழ்க்கையில் எத்தனை படித்தரங்கள் உண்டோ அத்தனையிலும் வாழ்ந்து காட்டிய மனிதப் புனிதராவார். அவ்வப்போது இறைவனால் அருளப் பெற்ற இறைச் செய்தியை மக்களுக்குத் தெளிவாக விளக்கிக் கூறியதோடு அமையாது அப்போதனைக்கேற்ப வாழ்ந்து காட்டியவர் அண்ணலார். அதனாலேயே இறைவன் தன் திருமறையில் பெருமானாரை