பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

 ‘ஓர் அழகிய முன்மாதிரி’யாக மனித குலத்துக்கு வழிகாட்ட அனுப்பியுள்ளதாகக் கூறியுள்ளான்.

“உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரில் அழகான முன் மாதிரி அமைந்திருக்கிறது” (33:21)

என்பது மறைதரும் இறைமொழியாகும்.

பெருமானார் இஸ்லாமிய மார்க்கம் பற்றி எடுத்துக் கூறி விளக்கிய செய்திகளும் அவற்றை செயல் முறையில் உணர்த்தும் வகையில் பெருமானார் வாழ்ந்து காட்டிய வாழ்வியல் நெறி முறைகளும் கொண்ட தொகுப்பாக ‘ஹதீஸ்’கள் திரு மறைக்கு அடுத்த நிலையில் மார்க்க விளக்க நூலாக விளங்கி வருகின்றன.

இறவா மறைமொழி!

ஆதாம் (அலை) முதல் அண்ணலார் (சல்) ஈராக வந்த இறைதூதர்கட்கு தவ்ராத், இன்ஜீல், புர்க்கான் உட்பட சுமார் முப்பத்தியாறு வேதங்கள் இறை தூதர்கள் மூலம் வழங்கப்பட்டுள்ளதாக இஸ்லாமிய மரபுச் செய்தி கூறுகிறது. இவற்றில் சில திருமறையிலும் குறிப்பிடப்பட்டுள்ளன.

இவற்றுள் பல வேதங்களும் அவற்றிற்குரிய வேத மொழிகளும் மறைந்து விட்டன. சில மொழிகள் வேதங்களை மட்டும் சுமந்து கொண்டுள்ளனவே தவிற, மக்களின் வாழ்விலிருந்து ஒதுங்கி வழக்கொழிந்து போய்விட்டன. இன்னும் சில மொழிகள் வேத மொழிகள் என்ற பெருமையை மட்டும் உடையனவாக இயங்கா மொழிகளாகிவிட்டன. ஆனால், இறுதி வேதமாகிய திருக்குர்ஆன் திருமறை வந்த மொழியாகிய அரபி மொழி ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகளாகியும் கூட, இன்னும் ஆற்றல் மிக்க மொழியாக மக்களிடையே விளங்கி வருகிறது. உயிர்ப்புத்