பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

வாழ்ந்துகாட்டி, இறைநெறியை நிலை நிறுத்தியதில் அழகிய முன்மாதிரியாக பெருமானார் (சல்) அவர்களும் அவர்களின் வாழ்வும் வாக்கும் இறைமறையாகிய திருக்குர்ஆனும் அடித்தளமாக அமையலாயின.

இவ்வாறு இஸ்லாம் பழங்காலம் முதலே உருவான பல்வேறு சமயங்களின் தொடர்ச்சியாகவே இன்றும் விளங்கி வருகிறது எனலாம். இத்தொடர்ச்சி முதல் மனிதர் ஆதாம் (அலை) தொடங்கி இன்றைய முஸ்லிம் வரையிலான தொடர்ச்சியாக அமைந்துள்ளது. அதுமட்டுமல்ல ஆதாம் (அலை) வாழ்ந்த காலத்தையும் இன்றைக்கு நாம் வாழும் காலத்தையும் இணைக்கும் இணைப்புப் பாலமாகவும் பெருமானார் வாழ்வும் வாக்கும் இஸ்லாமிய நெறி முறையும் அமைந்துள்ளன என்பது தெளிவு. உலகின் அனைத்துப் பகுதிகளும் மக்களினமும்கூட ஒருங்கிணைக்கப்படும் நிலை இதனால் உருவாகிறதெனலாம்.

அனைத்தும் மனிதனுக்காக
மனிதன் இறைவனுக்காக

இறைவன் மனிதனுக்குத் தேவையான அனைத்தையும் மண்ணிலும் விண்ணிலும் கடலாழத்திலும் படைத்தளித்துள்ளான். மறை பொருளான பலவற்றை அறிந்துணர நுண்மான் நுழைபுலத்தையும் மனிதனுக்களித்துள்ளான். பகுத்தறிவின் துணை கொண்டு ஆய்ந்து அவற்றையெல்லாம் நுகர்ந்தின்புற அவனால் இயலும். ஆனால், மனிதனை இறைவன் படைத்ததன் நோக்கம் அவன் தன்னை வணங்க என்பதே இஸ்லாமியக் கோட்பாடு

‘மண்ணையும் விண்ணையும் மனுவுக்காகப் படைத்தான்
மனுவைப் படைத்தான் தனை வணங்க’

என இறை நாட்டத்தை பீர் முஹம்மது அப்பா கூறுகிறார்.