பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

யாராலும் பெறப்படவும் இல்லை; யாரையும் பெற்றெடுக்கவும் இல்லை என்ற இறைக் கோட்பாடு மீது அசைக்க முடியாத அடித்தளத்தில் உறுதிமிகு இறை நம்பிக்கையானது அமைந்துள்ளது.

இறைவன் ஒருவன், பெயர்கள் பல

ஒரே இறைவன் என்ற உணர்வையும் கருத்தையும் பழம்பெரும் வேதங்களும் வேத விற்பன்னர்களும் எடுத்துக் கூறி விளக்கி வந்துள்ளார்கள். இதைப் பற்றி காஞ்சி மாமுனிவர் காமகோடி பீடம் ஸ்ரீ சங்கராச்சாரியார் அவர்கள் 1958 மே மாதத்தில் சென்னையில் நிகழ்த்திய உபதேசப் பேருரையில்,

“கடவுள் ஒருவரே, பல உருவங்களைப் பல பெயர்களில் தாங்கி இருக்கிறார். நாம் நம்முடைய மனத்தைப் பண்படுத்தி, அதை எந்தப் பெயரையுடைய எந்த உருவத்தையாவது தெளிவான பக்தியோடு ‘நினைத்து’ வணங்கி அர்ப்பணம் செய்தால் மோட்சம் கிடைக்கும். காளிதாசர் (குமாரசம்பவக் காவியத்தில்) ‘ஒரே மூர்த்தி முக்குணங்களை ஒட்டி, மூன்று ரூபமானார்’ என்று கூறுகின்றார். (‘இங்கு ரூபம்’ என்பது ஜடரூபம் அல்ல. ‘ஜோதி ரூபம்’) இந்த உண்மையை ரிக்வேதம், ‘தெய்வம் ஒன்று’ ஞானிகள் அதைப் பல பெயர்களால் வழிபடுகின்றனர் என்பதால் உணரக் கிடக்கின்றது. கீதையிலும் இந்த உண்மை தெளிவாகக் கூறப்பட்டுள்ளது,” எனக் கூறியுள்ளார்.

இங்கு ஸ்ரீ சங்கராச்சாரியார் அவர்கள் ‘எந்தப் பெயரையாவது, “எந்த உருவத்தையாவது ‘நினைத்து’ அர்ப்பணம் செய்தால் மோட்சம் கிடைக்கும் என்று கூறுவதன் மூலம் தெய்வத்தின் பெயரை மனத்தளவில் நினைத்து வழிபடுவதன் வாயிலாக ஒரே இறைவனை மனத்தளவில் எண்ணி அருவ வழிபாடு செய்யப் பணிக்கிறார். அதோடு ‘தெய்வம்’