பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54


இதிலிருந்து ஒரே இறைவன் என்ற கோட்பாட்டையே ஈஸா (அலை) அவர்கள் வலியுறுத்தியதாக இன்ஜில் வேதத்திலிருந்து தெளிவாக அறிகிறோம்.

இறை வணக்கம்

உலகத்துச் சமயங்கள் அனைத்துமே இறை வணக்கத்தைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்கப் பணிக்கின்றன. இறைவனை வணங்குவதற்காக மேற்கொள்ளும் சமயச் சடங்கு முறைகள், அதற்காகப் பயன்படுத்தும் பூசனைப் பொருட்கள் அநேகம் இருக்கலாம். இவற்றில் மாறுபாடும் வேறுபாடும் இருக்கலாம். ஆனால், இஸ்லாமிய இறை வணக்க முறையைப் பொறுத்தவரை இத்தகைய மாறுபாடு, வேறுபாடு போன்றவற்றிற்கெல்லாம் அறவே இடமில்லை. இஸ்லாமிய இறை வணக்கக் கோட்பாடு திட்ப, நுட்பமுடையதாகும். இறை வணக்கத்திற்கு உள்ளமும் உணர்வுமே அடித்தளமாக அமைகின்றன. வல்ல அல்லாஹ்வை மனத்தால் மட்டுமே நினைக்க முடியும். இறைவனை சாதாரண நிலையில் ஒரு நாளைக்கு ஐவேளையும் நள்ளிரவுத் தொழுகையான தஹஜ்ஜத் எனும் சிறப்புத் தொழுகை உட்பட ஆறு வேளையும் இறை வணக்கம் புரிய இஸ்லாம் பணிக்கிறது.

இறை வழிபாட்டின் அடித்தளம் ஒன்றே

இறைவனை வழிபடும் ஒரு ஹிந்து தன் இதயம் முழுவதிலும் இறையுணர்வை நிரப்பிய நிலையில் சரீர வணக்கத்தில் ஈடுபடவேண்டும். சரீர வணக்கம் என்பது முகவாய், செவிகள் இரண்டு, தலை, புயங்கள் இரண்டு, கைகள் இரண்டு எனும் எட்டு உறுப்புகளும் நிலத்தில் படிய இறை வணக்கம் புரியவேண்டும் எனப் பணிக்கிறது. இந்தியச் சமயங்கள் பலவும் இவ்வணக்க முறையையே வலியுறுத்துகின்றன.