பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

57


ஜகாத் எனும் தான தருமங்கள்

உலகத்திலுள்ள அனைத்துச் சமயங்களுமே மனிதன் வேண்டிய அளவு தான தருமங்கள் செய்து இறையருள் பெற விழைய வேண்டும் என்றே போதிக்கின்றன.

தானம் அளிக்கவோ தருமம் செய்யவோ வேண்டாம் எனக் கூறும் சமயம் எதுவுமே இவ்வுலகில் இல்லை என்றே கூறலாம்.

ஏழை எளியவர்கட்கு ஒரளவு வசதியுள்ளவர்களாயினும் கூட ஒவ்வொருவரும் அவர்களால் இயன்ற அளவு தான தருமங்கள் செய்ய வேண்டும் எனப் பணிக்கின்றன. ஏழை எளியோர்மாட்டு இத்தகைய தான, தருமம் செய்யும் இரக்கச் சிந்தனை உள்ளவர்களே இறைவனின் பேரருளை எளிதாகப் பெற முடியும் என்பதை எல்லாவகையிலும் எடுத்தோதுகின்றன.

இதே போன்று இஸ்லாமும் தான தருமம் மூலம் இறைவனின் இன்னருளைப் பெற வழிகாட்டுகின்றது. இஸ்லாம் மூன்று வகையான தான தருமங்களைச் செய்ய பணிக்கின்றது. இதில் ‘சதக்கா’ என்பது ஒன்று. ஒரு முஸ்லிம் தன் வாழ்நாள் முழுவதும் இயன்ற வழிகளிலெல்லாம் ஏழை எளிய மக்களுக்கு அவ்வப்போது தான தருமங்களைச் செய்ய வேண்டும் என்பதே சதக்கா வாகும்.

அடுத்து, இஸ்லாமிய தானம் ‘ஃபித்ரா’ என்பதாகும். இஃது எல்லா நாளிலும் வழங்கப்படும் தானம் அன்று. ஈதுல் ஃபித்ர், அன்று (ரமளான்) தொழுகைக்காகப் பள்ளி வாசல் நோக்கிச் செல்லும் ஒவ்வொரு முஸ்லிம் தொழுகையாளியும் ஒரு குறிப்பிட்ட அளவு தானியத்தையோ அல்லது அதன் பெருமானத்திற்குப் பணத்தையோ ஏழை எளியவர்கட்குத் தானமாக வழங்கிவிட்டே ஈத் தொழுகையில் கலந்து கொள்ள வேண்டும்.