பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

களாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம். (ஆதலால் உங்களில் ஒருவர் மற்றவரைவிட மேல் என்று பெருமை பாராட்டிக் கொள்வதற்கில்லை எனினும்) உங்களில் எவன் மிகவும் பயபக்தியுடையவனாக இருக்கிறானோ, அவன் தான் அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக மிக்கக் கண்ணியவான். நிச்சயமாக அல்லாஹ் (யாவையும்) நன்கறிந்தோனும் தெளிந்தோனுமாக இருக்கிறான்” (திருக்குர்ஆன் 49:13) எனத் தெளிவாகக் கூறுகிறது.

அவ்வகையில் இதுவரை உலகில் பிறந்தவர்களில் இறந்தோர் போக எஞ்சியிருப்பவர்கள் அறுநூறு கோடிப் பேர்களாவர். இவர்கள் அனைவருமே ஒரே மூலத் தாய் தந்தையர் வழிப்பிறந்த சகோதரர்கள்; உடன் பிறப்புகள் என்பதுதான் இறுதித் திருத்துதர் நபிகள் நாயகம் (சல்) அவர்கள் போதித்த கோட்பாடு, அதுவே இஸ்லாமியத் திருமறை திருக்குர்ஆன் தரும் மறைச் செய்தி.

அனைவரும் சோதரரே!

ஆதாம் (அலை) ஹவ்வா தொடங்கிப் பெருகிய மனித சமுதாயம் எண்ணிக்கையில் பெருக்கமடையவே, அவர்களிடையே சுயநல வேட்கையும் சுரண்டல் உணர்வும் தலை தூக்கத் தொடங்கியது. இதனால் தன்னலமுடையவர்களாயினர். அதுவரை இறை நெறிக்கொப்ப வாழ்ந்த மக்கள் இறைவழி பிறழ்ந்து வாழத் தலைப்பட்டனர். இதற்கிணங்க அவர்தம் சமுதாய அமைப்புமுறையும் மாறுபட்ட போக்கில் அமைவதாயிற்று.

தொடக்கத்தில் மனிதர்கள் அனைவரும் ஒரே சமுதாயக் கூட்டமாக இருந்தவர்கள் பின்னர் தன்னல வேட்கையோடு தனித்தனிக் குழுக்களாகப் பிரிய நேர்ந்ததைப் பற்றி திருக்குர்ஆன்.