பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

எச்சமயத்தவராயினும் அவர் நம் சகோதரரே

உலகெங்கும் உள்ள மக்கள் நாடு, இன, மொழி, சமயம் கடந்த நிலையில் அனைவரையும் ஒரே குலத்தவராகக் காணப் பணிக்கிறது. இஸ்லாம். அனைவருமே ஆதிப் பெற்றோர் ஆதாம்-ஹவ்வா வழி வந்தோர் என்பது அடிப்படை நியதியாகும்.

இந்த அடிப்படையில் ஒருவர் எந்தச் சமயத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் அவரை வேற்றுமை பாராட்டாது தன் சகோதரனாகப் பாவித்து மதிக்க வேண்டும் என்பதை இஸ்லாம் எல்லா வகையிலும் வலியுறுத்துகிறது. இதனைச் சிறப்பாக எண்பிக்கும் அரிய நிகழ்ச்சியொன்று பெருமானாரின் பெருவாழ்வில் நடைபெற்றதாக ஹதீஸில் காணப்படுகிறது.

ஒரு சமயம் நாயகத் திருமேனி தன் தோழர்களோடு அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே இறந்த யூதர் ஒருவரது சடலத்தைச் சிலர் தூக்கி வந்தனர். அவ்விறுதி ஊர்வலக் காட்சி அண்ணலாரின் கண்ணில் பட்டவுடனே பெருமானார் அவர்கள் தோழர்களோடு மேற்கொண்டிருந்த உரையாடலை உடன் நிறுத்திய தோடு சட்டென்று எழுந்து அமைதியாக நின்றார்கள். பெருமானார் ஏன் எழுந்து நிற்கிறார் என்பதற்கான காரணத்தை அறியாத அவரது தோழர்களும் அண்ணலாரோடு எழுந்து நின்றனர். இறந்த யூதரின் சவ ஊர்வலம் பார்வையிலிருந்து மறைந்த பின்னர் பெருமானார் கீழே அமர்ந்து உரையாடலைத் தொடர்ந்தார். பெருமானார் எழுந்து நின்றதற்கான காரணத்தை அறிய விரும்பிய அவர்தம் தோழர்கள் அண்ணலாரை நோக்கி,

“இவ்வாறு தாங்கள் எழுந்து நின்று மரியாதை செலுத்தியதற்கு ஏதேனும் சிறப்புக் காரணம் உண்டா என்பதை அறிய