பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

73


“தான் பிறந்த குலத்தின் காரணமாகவோ, தான் சார்ந்த இனத்தின் பேராலோ, தான் பேசும் மொழியின் காரணமாகவோ, பிறந்த நாட்டினாலோ, தான் பெற்ற கல்வியினாலோ ஒருவன் உயர்வு பாராட்டினால் அல்லது பேதம் காட்டினால் அது சாத்தானின் செயலாக இருக்குமே தவிற இறையம்சமான மனிதனின் செயலாக இருக்க முடியாது.” என்பது பெருமானாரின் உள்ளக் கிடக்கையாகும்.

ஆனால், மனிதனுக்கு உண்மையிலேயே பெருமைதரக் கூடிய பெரும் பண்பு ஒன்று உண்டு. அது என்ன என்பதை நாயகத் திருமேனி அவர்கள் விளக்கும்போது,

“ஒரு மனிதன் எந்த அளவுக்குத் தன்னையொத்த மனிதர்களை நடத்துகிறான்; ஒழுக்க நியதிகளைப் பேணி நடக்கிறான்; மனிதர் என்ற அளவில் மற்றவருடைய உயிர், பொருள்களைக் கண்ணியப்படுத்துகிறான்; அவர் பின்பற்றும் சமயத்தை மதிக்கிறான்; எந்த அளவுக்கு இறையாக்கமுடையவனாக இறைவன் வகுத்தளித்த வழியில் வாழ்கிறான் என்ற அளவுகோல்களின் அடிப்படையில் அவன் உயர்வும் தாழ்வும் கணிக்கப்படுமே தவிர வேறு எவ்வகையிலும் அல்ல” என்பது நபிகள் நாதரின் நல்லுபதேசத் திரட்டாகும்.

குலமும் கோத்திரமும் அடையாளமே

குலமும் கோத்திரமும் நிச்சயமாக மனிதனின் பெருமைக்கோ சிறுமைக்கோ கடுகளவும் காரணமில்லை. இவை மனிதர்களிடையே அடையாளங்காட்ட அமைந்தனவே தவிர பேதங்காட்ட உருவானவை அன்று என்பதை திருக்குர்ஆன்,

“மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஒர் ஆண் ஒர் பெண்ணிலிருந்துதான் படைத்தோம். பின்னர் ஒருவர்