பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76



இறைக் கூலி எல்லா சமயத்தவர்கட்கும் உண்டு

இறைவனால் படைக்கப்பட்ட மனிதனின் தலையாய நோக்கம் எல்லா வகையிலும் இறையருளைப் பெறுதலேயாகும். இஃது இறை நம்பிக்கையாளர்களின் நற்செயலைப் பொறுத்தமைவதாகும்.

எந்தச் சமயத்தைக் சார்ந்தவர்களாயினும் அவர்கள் நிகழ்த்துகின்ற வினைகளுக்கேற்ற பயனை, அவர்கள் நம்பி வணங்கும் அவ்வச் சமய இறைவனின் பேரருளை, நற்கூலியை அவ்வச் சமயத்தவர் பெறுவர் என்பதை இறை மறையாகிய திருக்குர்ஆனின் இரண்டாவது அத்தியாயத்தின் 62-வது வசனம் மிகத் தெளிவாக எடுத்தியம்புகிறது.

“நம்பிக்கையாளர்களாயினும் யூதர்களாயினும் கிறிஸ்தவர்களாயினும் ஸாபியின்களாயினும்-எவர்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் உண்மையாகவே விசுவாசித்து, நற்கருமத்தைச் செய்தார்களோ அவர்களுக்கு அவர்களுடைய கூலி, அவர்களுடைய இறைவனிடத்தில் நிச்சயமாக உண்டு. மேலும், அவர்கட்கு எவ்விதப் பயமும் இல்லை; அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்” என விரிவாகவும் விளக்கமாகவும் கூறுகிறது.

மார்க்கத்தில் கட்டாயத்திற்கு இடமே இல்லை

இறையருள் பெற விழைவோர் இஸ்லாமியராகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. அவர்கள் எச்சமயத்தைச் சார்ந்தோராகவும் இருக்கலாம். அவர்கள் சமயத்தை அவரவர் வழியில் பேண இஸ்லாம் எடுத்துக் கூறுகிறது. இதைப் பற்றி திருக்குர்ஆன்,

“உங்களுக்கு உங்கள் மார்க்கம்; அவர்களுக்கு அவர்கள் மார்க்கம்” என இயம்புகிறது.