பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

77



இஸ்லாத்தில் இணையுமாறு மக்களை வற்புறுத்தவோ கட்டாயப்படுத்தவோ மார்க்கத்தில் அறவே இடமில்லை. இத்தகைய செயலை இஸ்லாம் கடுமையாக எதிர்க்கிறது. இஸ்லாத்தில் தன்னை இணைத்துக் கொள்ள விரும்பும் ஒருவர் இஸ்லாமியக் கோட்பாடுகளைக் கேட்டு, இஸ்லாமிய மார்க்க ஞானத்தை அறிந்து, தெளிந்து அதன் மீது பற்றும் நம்பிக்கையும் கொண்டு, யாருடைய கட்டாயமுமின்றி தானாகவே இஸ்லாத்தில் இணைய முற்பட வேண்டும். அவ்வாறு தான் பலரும் இஸ்லாத்தில் இணைந்து கொண்டார்கள் என்பதுதான் கடந்த கால வரலாறு காட்டும் உண்மை. யாரும் இஸ்லாத்தின்பால் இழுக்கப்படவில்லை என்பதுதான் பெருமானார் வரலாறு தரும் செய்தி. ஏனெனில், அவ்வாறு யாரும் கட்டாயச் சூழ்நிலையில் இஸ்லாத்தில் இணைவதை இஸ்லாம் ஏற்க விரும்பவில்லை. மாறாக அத்தகு செயலை எதிர்க்கவும் செய்கிறது. ஏனெனில் அஃது இஸ்லாமியக் கொள்கைக்கு நேர்மாறானதுமாகும். இதுவே திருமறையின் தீர்ப்புமாகும்.

“இஸ்லாத்தில் நிர்ப்பந்தமே இல்லை” (திருக்குர்ஆன் 2:256) என்பது மறைதரும் இறைவாக்காகும்.

“நபியே! நீர் கூறும்: (முற்றிலும் உண்மையான) இவ் வேதமானது உம் இறைவனால் அருளப்பெற்றது. விரும்பியவர் (இதை) விசுவாசிக்கலாம், விரும்பாதவர் (இதை) நிராகரித்து விடலாம்”. (திருக்குர்ஆன் 18:29)

எனக் கூறுவதன் மூலம் இஸ்லாமிய நெறியை ஏற்பதும் ஏற்காது விடுவதும் அவரவர் விருப்பத்தைப் பொறுத்ததாகும். இதற்கான எத்தகு போக்கும் செயலும் இஸ்லாமிய நெறிக்கும் அண்ணலார் வாக்குக்கும் வழி காட்டுதலுக்கும் நேர்மாறானதாகும் என்பது தெளிவு.