பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6


இத்தகைய சிந்தனையின் விளைநிலமாக விளங்கிய பெருமை நம் தமிழ்மண்ணிற்குப் பண்டுதொட்டே உண்டு.

‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற பழந்தமிழனின் இறைக் கோட்பாடே இஸ்லாத்தின் அடித்தள இறைக்கொள்கையாக அமைந்துள்ளது. மற்றும், ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற பழந்தமிழனின் சமுதாயக் கோட்பாடு இஸ்லாமிய மார்க்கத்தின் சகோதரத்துவக் கோட்பாட்டின் ஆணிவேராக அமைந்துள்ளதெனலாம்.

இஸ்லாம் இன்று இனம், மொழி, நிறம், பண்பாடு, புவியியல் பிரிவுகள் அனைத்தையும் கடந்த நிலையில் புவியெங்கும் பரவியிருக்கிறதென்றால் அதற்கு அடிப்படைக் காரணம் ஒரே ஆத்மாவிலிருந்து படைக்கப்பட்ட மனிதனின் மூலாதாரம் ஒன்றாக இருப்பதுதான்.

கடந்த காலங்களில் பல்வேறு காரணங்களால் தவறான கண்ணோட்டத்தில் இஸ்லாமிய சமய நல்லிணக்க உணர்வுகள் சிலரால் மறைக்கப்பட்டன; மாற்றி, திரித்துக் கூறப்பட்டன; தவறாக விளக்கப்பட்டன. உண்மை நீண்ட நாள் உறங்க முடியாதல்லவா? அறிவுலகம் விழித்துக் கொண்ட நிலையில் இன்று திருமறைச் செய்திகளும் பெருமானார் வாழ்வும் வாக்கும் அறிவியல் பூர்வமாக நுணுகி ஆராயப்படுகின்றன. ஒருமைப்பாடு, சமய நல்லிணக்கப்போக்கு போன்ற உயர் கொள்கைகள் பூத்துக் குலுங்கும் பூங்காவாக இஸ்லாத்தைக் கண்டு உலகம் பேருவகை கொள்கிறது. அதன் வெளிப்பாடே இந்த ஆய்வு நூல்.

இஸ்லாத்தைப் பொறுத்தவரை அதன் மனிதக் கண்ணோட்டம் தனித்துவமுடையதாகும். இறையம்சமாக, இறைவனின் ஏகப்பிரதிநிதியாக மண்ணுலகில் விளங்கும் மனிதனின் இயல்புகளை அடியொற்றியே அவன் உயர்வுக்கும் உயர்தகைமைக்கும் வழிகாட்டுகிறது இஸ்லாம்.